திருவள்ளூர்: திருவள்ளூரில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூரில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ – ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜாஜி, திவ்யா, கணேசன், கணேசன், பாலசுந்தரம், பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளரும், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளருமான இரா.தாஸ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் தோழமை சங்க நிர்வாகிகள் காந்திமதிநாதன், ருக்மாங்கதன், பிரசன்னா ஜான், காத்தவராயன், வெண்ணிலா உள்பட பல்வேறு சங்கத்தைச் சார்ந்த நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழ்நாடு தலைமை ஆசிரியர் கழக மாநில தலைவர் ஞானசேகரன் நிறைவுரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர்.
பின்னர் ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் நிருபர்களிடம் கூறிகையில், அரசு அலுவலர்கள் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க ஏதுவாக அமைச்சர்கள் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினருடன் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எங்கள் கோரிக்கைகளான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், குறிப்பாக ஊர்புற நூலகங்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள், எம்ஆர்பி செவிலியர் உள்ளிட்டோருக்கு கால முறை ஊதியத்தை வழங்கிட வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறோம். எங்களின் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஒருங்கிணைப்பாளர்கள் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுப்போம் என்றார்.
The post 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
