×

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன், 7 திருட்டு வழக்குகளில் மீண்டும் கைது

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனை 7 திருட்டு வழக்குகளில் பள்ளிக்கரணை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிசம்பர் மாதம் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில், கோட்டூரை சேர்ந்த பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது தப்பியோட முயன்ற ஞானசேகரன், கீழே விழுந்ததில் அவரது இடது காலும் இடது கையும் முறிந்தது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவரை சென்னை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில், சென்னை பள்ளிக்கரணையில் உள்ள பல்வேறு பகுதிகளில் 7 வீடுகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக ஞானசேகரன் வாக்குமூலம் அளித்தார். மேலும், கடந்த 2022ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள வில்லா வீடுகளை குறிவைத்து கார்களில் வந்து கொள்ளையடித்துள்ளார். இது தவிர, கொள்ளையடித்த பணத்தில், தான் சொகுசு கார் வாங்கியதாகவும், பிரியாணி கடை வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, 7 திருட்டு வழக்குகள் தொடர்பாக சிறையில் உள்ள ஞானசேகரனை மீண்டும் பள்ளிக்கரணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் வேறு இடங்களில் கைவரிசை காட்டியுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன், 7 திருட்டு வழக்குகளில் மீண்டும் கைது appeared first on Dinakaran.

Tags : Ghanasekaran ,Anna University ,Chennai ,Dinakaran ,
× RELATED அன்புமணி மீதான ஊழல் வழக்கை சிபிஐ...