×

தாய்மொழி என்பது வெறும் தொடர்புக்குதவும் கருவி மட்டுமல்ல. ஓர் இனத்தின் அடையாளம்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை : தாய்மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளம், பண்பாடு, வரலாற்றின் அடித்தளம் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். உலக தாய்மொழி தினம் இன்று (பிப்.21) கொண்டாடப்படுகிறது. உலகின் பன்மொழி கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும், உலகம் முழுவதும் உள்ள பன்முக மொழி, கலாச்சாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மொழிகளை பாதுகாக்கும் நோக்கிலும் ஆண்டுதோறும் இந்த தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ, கடந்த 1999ம் ஆண்டு தாய்மொழி தினத்தை அங்கீகரித்தது. பங்களாதேஷ் அரசின் தொடர் முயற்சிகளாலும், உலக நாடுகளின் ஆதரவாலும் பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழி தினமாக யுனெஸ்கோ அறிவித்தது.

இந்த நிலையில் தாய்மொழி தினத்தை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “தாய்மொழி என்பது வெறும் தொடர்புக்குதவும் கருவி மட்டுமல்ல. ஓர் இனத்தின் அடையாளம், பண்பாடு, வரலாற்றின் அடித்தளம்.

தமிழைக் காக்க வேண்டும் என்ற நம் உணர்வுக்கும், இந்தியைத் திணிக்க வேண்டும் எனும் பாசிச சூழ்ச்சிக்கும் இதுவே அடிப்படை.

தமிழை வீழ்த்த வந்த சூழ்ச்சிகளை எல்லாம் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக தமிழ்நாடு வீழ்த்தியே வந்திருக்கிறது.

இனியும் வீழ்த்தும்.

“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் – இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே ” – எனும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வரிகளுக்கு ஏற்ப ஒன்றுபட்டு நம் தமிழ் காப்போம்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post தாய்மொழி என்பது வெறும் தொடர்புக்குதவும் கருவி மட்டுமல்ல. ஓர் இனத்தின் அடையாளம்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister Assistant Secretary ,Stalin ,Chennai ,Deputy Chief Minister ,Udayaniti Stalin ,World Mother Language Day ,
× RELATED சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்;...