திருத்தணி: திருத்தணி அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் ஆற்காடு குப்பம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் கரைப்பகுதியில் விளை நிலங்களுக்கு இடையில் பழமையான அரண்மனை சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இங்கு காணும் பொங்கலின்போது ஆற்காடு குப்பம் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த 7 கிராம மக்கள் இணைந்து 7 சுவாமிகளின் பாரிவேட்டை உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். கார்வேட் நகரம் அரசர்களால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இன்ந்த அரண்மனையை சீரமைத்து பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட தொல்லியல்துறை அலுவலர் லோகநாதன் நேற்று அரண்மனையை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், இந்த அரண்மனை 17-18ம் நூற்றாண்டுகளுக்கு அப்பாற்பட்ட அரண்மனை. கார்வேட்நகரம் சிற்றரசர்கள் தங்கி வரி வசூல் செய்த அரண்மனையாக இருக்கலாம். கடலூர் மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி கவர்னர் மாளிகை மற்றும் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை என இரண்டு இடங்களில் உள்ள அரண்மனை போல் இந்த அரண்மனை காட்சி அளிக்கிறது. இந்த பங்களா செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலந்த கலவையால் கட்டப்பட்டது. 4 தூண்கள் அமைக்கப்பட்டு முழுவதுமாக கட்டப்பட்டுள்ளதால் ஒவ்வொரு செங்கல்லும் அழகான வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது.
முக்கியமாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்ட இடத்தின் கீழே குதிரைகள் தங்கும் இடமாக அமைக்கப்பட்டுள்ளது. அரண்மனையை சுற்றிலும் விவசாய பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த அரண்மனையை பார்வையிட புதிதாக சாலை போடப்பட்டுள்ளது. முழுவதுமாக ஆய்வு செய்த பின்னர் தொழில்துறை சார்பாக மக்களின் பயன்பாட்டிற்கும், பார்வைக்கும் வரும். 17 மற்றும் 18 நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட இந்த பங்களா தேக்கு மரங்களால் மேல் பகுதியும், கீழ் பகுதி நான்கடி உயரத்திற்கும் 12 அடி அகலத்திற்கும் முழுவதுமாக கட்டப்பட்டுள்ளது. இது சரி செய்த பிறகு முழுவதுமாக மக்களின் பார்வைக்கு கொண்டுவரப்படும் என்றார்.
The post சிதிலமடைந்து காணப்படும் 18ம் நூற்றாண்டு அரண்மனை: தொல்லியல் துறையினர் ஆய்வு appeared first on Dinakaran.
