×

ரயில் நிலையங்களில் பாலியல் தொந்தரவு எதிரொலி; ரயில்வே காவல் அதிகாரிகளுடன் டிஜிபி சங்கர் ஜிவால் ஆலோசனை

சென்னை: தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு காவல்துறையின் ரயில்வே போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்தாலும், பல இடங்களில் ரயில் நிலையங்களில் பெண்கள் மற்றும் பயணிகளுக்கு மது போதையில் சிலர் தொந்தரவு செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் ரயில்வே காவல்துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் ரயில்வே காவல்துறை டிஜிபி வன்னியபெருமாள், ரயில்வே ஐ.ஜி.ஏ.ஜி.பாபு, ஆர்.பி.எப். ஐஜி ஈஸ்வர் ராவ் உள்ளிட்ட ரயில்வே காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ரயில் நிலையங்களில் வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது பயணிகளுக்கு மது போதையில் தொந்தரவு கொடுக்கும் போதை ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுப்பது, சென்னை உட்பட முக்கிய ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது, இரவு நேரங்களில் பெண்கள் பெட்டியில் ரயில்வே பெண் காவலர்களை கட்டாயம் பணியில் ஈடுபடுத்துவது போன்ற முக்கிய முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
திருட்டு, செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க ரயில் நிலையங்களில் சுழற்சி முறையில் பாதுகாப்பு வழங்குவதும் தமிழக ரயில்வே போலீசார் ஆர்.பி.எப். காவலர்களுடன் இணைந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post ரயில் நிலையங்களில் பாலியல் தொந்தரவு எதிரொலி; ரயில்வே காவல் அதிகாரிகளுடன் டிஜிபி சங்கர் ஜிவால் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : DGP ,Shankar Jiwal ,Chennai ,Tamil Nadu Police ,Tamil Nadu ,
× RELATED இது தகவல்கள் எளிதாக கிடைக்கும் காலம்:...