கொல்கத்தா: மகா கும்பமேளா மரண மேளாவாகி விட்டதாக கூறிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உபி அரசு பலி எண்ணிக்கையை மறைப்பதாக குற்றம்சாட்டினார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அம்மாநில சட்டப்பேரவையில் நேற்று பேசியதாவது: உபி மாநிலம் பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் கடந்த மாதம் நெரிசலில் சிக்கி 30 பக்தர்கள் பலியாகினர். டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் கும்பமேளா செல்ல வந்த 18 பயணிகள் பலியாகினர். ஆனால் இவற்றில் நிறைய சடலங்களை மறைத்து பலி எண்ணிக்கையை அவர்கள் குறைத்து காட்டுகிறார்கள்.
பாஜ ஆட்சியில் மகா கும்பமேளா மரண கும்பமேளாவாகி விட்டது. கும்பமேளா பற்றி உபி அரசு மிகைப்படுத்திய கூற்றுகளை வெளியிடுகிறது, ஆனால் முறையான எந்த ஏற்பாடுகளையும் அவர்கள் செய்யவில்லை. பலர் நெரிசலில் சிக்கி பலியாகியும், அரசு தனது தவறை உணரவில்லை. அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் கைவிலங்கிட்டு கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு நாடு கடத்தப்படுவது மிகுந்த அவமானம். இவ்வாறு அவர் கூறினார்.
* ராஜினாமா செய்கிறேன்
முதல்வர் மம்தா மேலும் பேசுகையில், ‘‘எனக்கு வங்கதேச தீவிரவாதிகளுடனும் அடிப்படைவாதிகளுடனும் தொடர்பு இருப்பதாக பாஜ எம்எல்ஏக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. இதைப் பற்றி பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி உள்ளேன். என்மீதான குற்றச்சாட்டை பாஜ நிரூபித்தால் முதல்வர் பதவியையே ராஜினாமா செய்து விடுகிறேன். நான் முஸ்லீம் லீக் உறுப்பினராக இருப்பதாக கூறுகின்றனர். அதையும் வன்மையாக கண்டிக்கிறேன். பேச்சு சுதந்திரம் என்பது வெறுப்பு பேச்சு மற்றும் மக்களை பிளவுபடுத்தும் பேச்சுக்களை ஒருபோதும் அனுமதிக்காது. என்னை சந்திக்க துணிவில்லாததால் அவையில் நான் பேசும் போதெல்லாம் பாஜ எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்கிறார்கள்’’ என்றார்.
The post உயிர் பலியை மறைக்கும் உபி அரசு மகா கும்பமேளா நிகழ்ச்சி மரண மேளாவாகி விட்டது: மம்தா சாடல் appeared first on Dinakaran.
