×

கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம் தேதி ஆஜராக விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன்

 

புதுடெல்லி: கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி நடைபெற்ற நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார பொதுக்கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 110க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி, கடந்த அக்டோபர் மாதம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவின் கண்காணிப்பில், சிபிஐ அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியதுடன், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், நிர்வாகி ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடமும், மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி.யிடமும் ஏற்கனவே விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் சிபிஐ அனுப்பிய சம்மன் அடிப்படையில் நேற்று முன்தினம் விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராகி இருந்தார். இதைத்தொடர்ந்து அவரிடம் சுமார் ஏழு மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று இரண்டாவது நாளாகவும் விஜய் இடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் விஜய் தரப்பில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது.

அதில் தமிழகத்தில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட உள்ளதால் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முன்னதாகவே திட்டமிட்டு அதற்கான நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனால் வேறொரு விசாரணை தேதியை எங்களுக்கு வழங்க வேண்டும் அதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குகிறோம் என்று உறுதி அளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து விஜய் தரப்பு கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த சிபிஐ அதிகாரிகள் அடுத்த விசாரணை தேதியை பின்னர் அறிவிக்கிறோம் என்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் கரூர் துயர சம்பவம் தொடர்பான விவகாரத்தில் விஜய்யை வரும் 19ம் தேதி அதாவது திங்கட்கிழமை அன்று மீண்டும் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் திங்கட்கிழமை காலை 11:00 மணி அளவில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் கரூர் துயரம் சம்பவம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் மற்றும் வாக்குமூலம் அளிக்க உள்ளார்.

* ஜனநாயகன் வழக்கு நாளை விசாரணை

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் படதயாரிப்பு நிறுவனம் மேல் முறையீடு செய்திருந்தது. அதேப்போன்று சென்சார்போர்டு மற்றும் அதன் பிரந்திய அலுவலர் ஆகியோர் தரப்பில் கேவியட் மனுவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட மனுக்கள் அனைத்தும் பொங்கலன்று (நாளை) உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் அமர்வில் விசாரணைக்கு வருகிறது.

Tags : CBI ,Vijay ,Karur ,New Delhi ,Tamil Nadu Victory Party ,Velusamypuram, Karur district ,
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...