×

இங்கிலாந்து குடியுரிமை, இந்திய தேர்தல்களில் ஓட்டு… அசாம் மாஜி முதல்வர் மருமகளுக்கு பாக். ஐஎஸ்ஐயுடன் தொடர்பா? தேசிய அரசியலையே அதிர வைத்த பா.ஜவின் குற்றச்சாட்டு; பாக். திட்டக்குழு ஆலோசகர் மீது உபா சட்டத்தில் வழக்கு

அசாம் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தான் தேர்தல். ஆனால் அரசியல் களம் இப்போதே அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. காரணம் அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய் மருமகளும், தற்போதைய மக்களவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் கவுரவ் கோகாய் மனைவியும், இங்கிலாந்து குடியுரிமை பெற்றவருமான எலிசபெத் கோல்பர்ன் தான். பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது, அதனால் தான் வெளியுறவுத்துறை, தேச பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை கவுரவ் கோகாய் மக்களவையில் அதிகம் கேட்கிறார், இங்கிலாந்து குடியுரிமை பெற்ற அவரது மனைவி இந்திய தேர்தல்களில் ஓட்டு போடுகிறார் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றம் சாட்டியது இந்திய அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ தோல்வி உறுதி என்பதால் என்மீதும், என் மனைவி மீதும் தேவையற்ற குற்றம் சுமத்துகிறார் முதல்வர் சர்மா என்று கவுரவ் கோகாய் விளக்கம் கொடுத்தாலும், இந்த விவகாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுவிட்டது அசாம் பா.ஜ அரசு. முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதுகுறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதுபற்றி முதல்வர் சர்மா கூறுகையில், ‘பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவரும், அந்த நாட்டின் திட்டக்குழு ஆலோசகராக இருந்தவருமான அலி தவுக்கீர் ஷேக் என்பவர், அந்நாட்டின் அரசின் வேறுசில முக்கிய பதவிகளில் பணியாற்றியுள்ளார். இவருக்கும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவரும், அசாம் காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாயின் மனைவியுமான எலிசபெத் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவருகிறது. இங்கிலாந்து நாட்டவரான எலிசபெத், பாகிஸ்தானின் அலி ஷேக்குடன் பணிபுரிந்துள்ளார். அதனால் நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி, இவ்விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவின்படி பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அலி ஷேக் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு காவல்துறை இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்து குடிமகளாக எலிசபெத் இருந்த போதிலும், அவர் இந்திய தேர்தல்களில் வாக்களித்துள்ளார். எனவே மாநில அரசு இந்த விஷயத்தை ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும்’ என்றார்.

இந்த விவகாரத்தில் அவர் இன்னும் ஒருபடி மேலே சென்று,’ அசாம் எம்.பி.யின் மனைவியான அவர் பிரிட்டிஷ் குடிமகளாக இருந்தாலும், இந்த விசாரணைக்கு ஒத்துழைப்பார், எங்களுக்கு உதவுவார். அவரது பாஸ்போர்ட், விசா மற்றும் பயண ஆவணங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்வார் என்று நம்புகிறோம்’ என்றார். கவுரவ் கோகாய் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கலியாபோர் தொகுதியில் இருந்து போட்டியிட்டு எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக மனைவி எலிசபெத் பிரசாரம் செய்தார். இதன் மூலம் விசா நிபந்தனைகளை எலிசபெத் மீறி விட்டதாகவும் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றம் சாட்டினார்.

இதற்கு காங்கிரஸ் தலைவர் கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் விளக்கம் அளிக்க வேண்டும் என்கிறது பா.ஜ. முதல்வரின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறிய கவுரவ் கோகாய்,’ பா.ஜ குற்றச்சாட்டு அபத்தமானது, அரசியல் உள்நோக்கம் கொண்டது. அவர்கள் இப்போது பரப்பும் தவறான தகவல்கள் அசாம் பாஜவின் பலவீனத்தை நிரூபிக்கிறது’ என்று கூறி எளிதாக கடந்துவிட்டார். ஆனால் விஷயத்தை அவ்வளவு எளிதாக முடிக்க அசாம் அரசு தயாரில்லை. முதல்வர் ஹிமந்தாபிஸ்வா சர்மாவின் உத்தரவுப்படி, பாகிஸ்தானை சேர்ந்த அலி தவுக்கீர் ஷேக் மீது அசாம் போலீசார் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவின் உள்விவகாரங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் குறித்து அலி தவுக்கீர் ஷேக் தெரிவித்த கருத்துக்கள் மத நல்லிணக்கம் மற்றும் தேசத்தின் நலன்களை சீர்குலைக்கும் நோக்கத்தில் இருந்ததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீது பிரிவு 48, 152, 61, 197(1), உபா 13(1) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரிவு 48 இந்தியாவிற்கு வெளியே செய்யப்படும் தூண்டுதல்களைக் கையாள்கிறது. பிரிவு 152 பிரிவினை, ஆயுதமேந்திய கிளர்ச்சி, நாசகார நடவடிக்கைகள் ஆகியவற்றைக் குறிக்கிறது. பிரிவு 197(1) தேசிய ஒருமைப்பாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் செயல்கள் அல்லது அறிக்கைகளை குறிக்கிறது. பிரிவு 61 குற்றவியல் சதியைகுறிக்கிறது. உபா சட்டத்தின் பிரிவு 13(1) சட்டத்திற்குப் புறம்பான செயல்களுக்கான தண்டனையை குறிக்கிறது.

இதுபற்றி அசாம் டிஜிபி ஹர்மீத் சிங் கூறுகையில்,’ அசாம் அமைச்சரவை அறிவுறுத்தலின் பேரில், சிறப்பு விசாரணை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் அலி தவுக்கீர் ஷேக் மற்றும் தெரியாத சிலருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதில் அலி தவுக்கீர் ஷேக்கின் செயல்பாடுகள் தேசிய பாதுகாப்புக்கு பாதகமானது. இதில் இந்தியாவிற்குள்ளும் மற்றும் வெளியில் உள்ளவர்கள், அசாமில் அல்லது இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ளவர்கள் இதில் ஈடுபட்டுள்ளார்களா என்பதும் விசாரணையில் ஆராயப்படும்’ என்றார்.

கவுரவ் கோகாய் மனைவி எலிசபெத் கோல்பர்னின் பாகிஸ்தான் தொடர்புகள் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்படும். ஏனெனில் அலி தவுக்கீர் ஷேக்கின் சமூக ஊடக செயல்பாட்டை பார்க்கும் போது, அவர் எலிசபெத்துடன் தொடர்பில் இருந்ததாகத் தெரிகிறது என்று அசாம் அமைச்சரவை தீர்மானம் கூறியது. ஆனால் கவுரவ் கோகாய் மனைவி எலிசபெத் மீது போலீசார் எந்த வழக்கும் பதியவில்லை. இருப்பினும் அரசியல் பரபரப்பால் அதிர்ந்து போய் கிடக்கிறது அசாம்.

* மனைவி எலிசபெத் மூலம் கவுரவ் கோகாய் சிக்கியிருக்கலாம்
அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில்,’ காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் தனது பிரிட்டிஷ் மனைவி எலிசபெத் கோல்பர்ன் மூலம் ஒரு பெரிய இந்தியா எதிர்ப்பு சதியில் சிக்க வைக்கப்பட்டிருக்கலாம் அல்லது அச்சுறுத்தப்பட்டிருக்கலாம். இந்த விவகாரம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. இது தேசிய பாதுகாப்பு பிரச்சினை. இந்த விவகாரத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் எடுத்துரைத்து, மாநில அரசின் விசாரணையை, ஒன்றிய விசாரணை அமைப்புகளுடன் எவ்வாறு இணைக்கலாம் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். ஒரு பெரிய சதியில் கோகாய் சிக்கியிருக்கலாம்.

இதில் அவர் ஒரு நடிகராகத் தெரிகிறது, அவர் இயக்குநராக இல்லை. ஒருவேளை அவர் தற்செயலாக சிக்கியிருக்கலாம். எனவே, இந்த விஷயத்தை நாங்கள் அனுதாபக் கண்ணோட்டத்துடன் ஆராய்வோம். இந்த நேரத்தில் அவரைக் குற்றம் சாட்ட விரும்பவில்லை. லண்டன், அமெரிக்கா மற்றும் இஸ்லாமாபாத் சம்பந்தப்பட்ட விதத்தில், அவர் அச்சுறுத்தப்பட்டிருக்கலாம். அதைப் பற்றி யாருக்குத் தெரியும்? எனவே, முழு விஷயத்திற்கும் தீவிரமான ஆழமான விசாரணை தேவைப்படுகிறது’ என்றார்.

யார் இந்த எலிசபெத்?
* இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் எலிசபெத் கோல்பர்ன். லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் (எல்எஸ்இ) சர்வதேச அரசியல் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
* எலிசபெத் 2009ல் ஐரோப்பா காலநிலை மாற்றம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டார். அமெரிக்க செனட், ஐ.நா செயலகம், தான்சானியா, தென்னாப்பிரிக்காவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்காகவும் பணியாற்றியுள்ளார்.
* 2010ல் ஐக்கிய நாடுகள் செயலகத்தின் தடைகள் குழுவில் பணியாற்றிய கவுரவ் கோகோய், அப்போது எலிசபெத் கோல்பர்னை சந்தித்தார்.
* 2011 மார்ச் மாதம் ஆசிய காலநிலை மாற்றம் மற்றும் மேம்பாட்டுக் கொள்கை உருவாக்கம் மற்றும் ஆராய்ச்சி தொடர்பான பணியில் சேர்ந்தார்.
* 2011 முதல் 2015 வரை இந்த பணியில் இருந்த போது பாகிஸ்தானில் சில காலம் தங்கியிருந்தார்.
* 2013ல் டெல்லியில் கவுரவ் கோகாய், எலிசபெத் திருமணம் நடந்தது. தற்போது தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

* அவர் ஐஎஸ்ஐ என்றால் நான் ரா ஏஜென்ட்…
கவுரவ் கோகாய் கூறுகையில்,’ எனது மனைவி மீதான குற்றச்சாட்டுகள் வேடிக்கையாக உள்ளன. என் மனைவி ஐஎஸ்ஐ ஏஜென்ட் என்றால், நான் ரா ஏஜென்ட்’ என கிண்டல் செய்தார்.

அசாம் முதல்வரின் குற்றச்சாட்டுகள் என்னென்ன?
* கவுரவ் கோகாய் மனைவி எலிசபெத்துக்கு பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புகளுடன் (ஐஎஸ்ஐ) தொடர்பு உள்ளது. ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்புடைய நபர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
* கவுரவ் கோகோயை மணந்த போதிலும், எலிசபெத் தனது இங்கிலாந்து குடியுரிமையை 12 ஆண்டுகள் தக்க வைத்துள்ளார்.
* இன்னும் அவர் ஏன் இந்திய குடியுரிமையை பெறவில்லை.
* 2015ம் ஆண்டு இந்தியாவிற்கான அப்போதைய பாகிஸ்தான் உயர் ஆணையரை கவுரவ் கோகாய் சந்தித்தது ஏன்?

The post இங்கிலாந்து குடியுரிமை, இந்திய தேர்தல்களில் ஓட்டு… அசாம் மாஜி முதல்வர் மருமகளுக்கு பாக். ஐஎஸ்ஐயுடன் தொடர்பா? தேசிய அரசியலையே அதிர வைத்த பா.ஜவின் குற்றச்சாட்டு; பாக். திட்டக்குழு ஆலோசகர் மீது உபா சட்டத்தில் வழக்கு appeared first on Dinakaran.

Tags : UK ,Assam ,Chief Minister ,BJP ,Pak. Planning Commission ,Assam Assembly ,Tarun Gogoi ,Lok Sabha ,Deputy Leader ,Gaurav Gogoi ,Pak. ,ISI ,Dinakaran ,
× RELATED பரிதவிக்க விடுவதால் தொடரும் அவலம்...