
16.2.2025 – ஞாயிறு சங்கடஹர சதுர்த்தி
இந்த சங்கடஹர சதுர்த்தி ஞாயிற்றுக்கிழமை வருவது மிகவும் சிறப்பு. ஞானத்துக்கு உரிய சூரிய நாள். ஞானக் கடவுளாகிய விநாயகருக்கு சதுர்த்தி விரதம். சங்கட என்றால் துன்பம். ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதம் சங்கடஹர சதுர்த்தி. இந்த சதுர்த்தி சந்திரனுக்குரிய அஸ்த நட்சத்திரத்தில் வருவது இன்னும் விசேஷம். அஸ்த நட்சத்திரம் புதனுக்குரிய கன்னிராசியில் இருக்கிறது. இது கால சக்கரத்துக்கு ஆறாவது ராசி என்பதால், இந்த விரதம் இருப்பவர்களுக்கு பகை, கடன், நோய் முதலி யவைகள் விலகி, நல்ல நட்பு கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும்.
அதிகாலையில் எழுந்து நீராடி, விநாயகருக்கு விளக்கு ஏற்றி, அறுகம்புல் மற்றும் வாசனை மலர்கள் வைத்து பூஜிக்க வேண்டும். மாலை வரை உபவாசம் இருந்து, மாலை வேளையில் அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று, சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொண்டு, அதன் பிறகு உணவு உண்ண வேண்டும். விநாயகர் கோயிலுக்கு அபிஷேக அர்ச்சனை பொருட்களை வாங்கித் தரலாம் அல்லது அர்ச்சனை செய்யலாம்.
16.2.2025 – ஞாயிறு ஆதித்ய ஹஸ்தம்
ஆதித்யன் என்றால் சூரியன். சூரியனுக்கு உரிய கிழமை ஞாயிற்றுக் கிழமை. ஞாயிற்றுக் கிழமையும் அஸ்த நட்சத்திரமும் கூடியிருந்தால், அந்த நாள் ஒரு புண்ணிய நாளாகும் இதை சாஸ்திரத்தில் ஆதித்ய அஸ்தம் என்று சொல்வார்கள். இந்த நாளில் சகலவிதமான பூஜைகள், பிரார்த்தனைகள் அபிஷேக ஆராதனைகள் செய்யலாம். அதற்கு சிறந்த பலன் உண்டு. இந்த நாளில் காலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்வதும், சூரிய உதயத்தில் பூஜை செய்வதும் மிகச் சிறந்த பலனைத் தரும். இது ஆண்டிற்கு ஓரிரு முறை வருகின்ற அபூர்வ நாளாகும்.
16.2.2025 – ஞாயிறு எறிபத்த நாயனார் குருபூஜை
எறிபத்த நாயனார், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். மாசி மாதத்தில், அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர். இவர் கொங்கு நாட்டிலே கருவூரில் (கரூர்) அவதரித்தவர். அங்கே உள்ள ஆனிலை என்னும் திருக்கோயிலில் உள்ள சிவபெருமானை வழிபட்டு, சிவனடியார்களுக்கு அல்லும் பகலும் சிவத்தொண்டு புரிந்து வந்தவர். எறிபத்த நாயனார் பரசு எனும் மழுவை ஒரு கையில் எப்பொழுதும் வைத்திருப்பார். சிவனடியார்களுக்கு எந்த பகைவர்களால் எத்தகைய ஆபத்து ஏற்பட்டாலும், அந்த ஆபத்தை தம்முடைய ஆயுதத்தால் நீக்குவார். எத்தகைய பகைவர்களாக இருந்தாலும் அது பற்றிக் கவலைப்படமாட்டார்.
அந்த சிவன் கோயிலில் சிவகாமியாண்டார் என்னும் முதிய அடியவர் ஒருவர் இருந்தார். அவர் திரு நந்தவனத் தொண்டு செய்து கொண்டிருந்தவர். ஒருநாள் அவர் சிவபெருமானுக்காக நறுமணமிக்க மலர்களைக் கொய்து பூக்கூடையில் நிறைத்து, அதை ஒரு தண்டில் வைத்து தாங்கி வருகின்ற பொழுது, புகழ்ச்சோழனின் பட்டத்து யானை, துதிக்கையால் பூக்கூடையைப் பறித்து எறிந்து காலால் நசுக்கியது.
சிவனுக்குரிய பூக்கள் இப்படி மண்ணில் சிந்தி வீணாகி விட்டதே என்று கண் கலங்கி நிலத்திலே விழுந்து கதறினார் சிவகாமியாண்டார். அந்த ஓலத் தைக் கேட்டு விரைந்து வந்தார் எறிபத்தர். அது மன்னரின் பட்டத்து யானை என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், ஓடிச் சென்று அந்த யானையையும், அந்த யானையின் பாகனையும் தன்னுடைய ஆயுதத்தால் தண்டித்தார். செய்தி அறிந்த புகழ்ச்சோழர் வெகுண்டு, சேனையோடு சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தார்.
அங்கே எதிரிகள் யாரும் இல்லாமல் தனித்த நிலையில் சிவக் கோலத்தில் கையில் மழு தாங்கி எறிபத்தநாயனார் நிற்பதைப் பார்த்தார். “இவர் குற்றம் புரிந்தவராக நிச்சயம் இருக்க முடியாது, ஏதோ தவறு நடந்திருக்கிறது” என்று அவரிடம் விசாரிக்க, அவர் யானையும் பாகனும் சிவனடியாரை துன்புறுத்தி, சிவ பூஜைக்குரிய பூக்களை தூக்கி எறிந்ததை எடுத்துரைத்தார்.
புகழனார் தலைமேல் கைகுவித்து, “அடியாரே! நன்று செய்தீர். நீங்கள் கொடுத்த தண்டனை போதாது. இந்த யானைக்குரிய அடியேனையும் நீங்கள் தண்டிக்க வேண்டும்’’ என்று வாளை எடுத்துக் கொடுக்க அதுகண்ட எறிபத்த நாயனார், மன்னனின் அன்பினையும் அடக்கத்தையும் சிவனடியார்கள் மீது கொண்ட பாசத்தையும் எண்ணி, மன்னரின் வாளை பிடிங்கிக் கொண்டு, “மன்னருக்கு இத்தகைய குற்றம் செய்தவன் நானல்லவோ பாவி! எனவே இந்த வாளால் நான் என் உயிரை முடித்துக் கொள்கின்றேன்’’ என்று தன் கழுத்தை வெட்டிக் கொள்ள முற்பட்டபோது, புகழனார், வாளையும் கையையும் பிடித்து கொண்டார்.
இவர்கள் இருவரின் சிவ பக்தியை அறிந்த சிவபெருமான் தோன்றி, தடுத் தாட்கொண்டு, இறந்த பட்டத்து யானையையும் பாகனையும் உயிர் பெறச் செய்தார். அவர்களுடைய சிவபக்தியை ஊரறியச் செய்தார். திருத் தொண்டத் தொகையில் சுந்தரர், “இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தர்க்கு அடியேன்” என்று பாடுகின்றார். அவருடைய குருபூஜை நாள் இன்று.
18.2.2025 – செவ்வாய் கோவை கோனியம்மன் கோயில் பூ சுற்று விழா
கோவையின் காவல்தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழா முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இன்று இரவு 9 மணி அளவில் பூச்சாட்டு விழா நடைபெறும். இதற்காக வெறைட்டிஹால் ரோடு தேவேந்திரன் வீதியில் இருந்து பூக்கம்பம் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்படும். பின்னர், அந்த கம்பம் கோயிலில் இருந்து தொடங்கி வைசியாள் வீதி, கற்பக கவுண்டர் வீதி, ராஜவீதி, ஒப்பணக்கார வீதி வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோயில் வந்தடையும். கோயிலுக்கு பூக்கம்பம் வந்ததும் மீண்டும் பூஜை செய்யப்படும் அதைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் கம்பம் நடப்படும். அதற்கு ஏராளமான பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபடுவர்.
18.2.2025 – செவ்வாய் கல்யாண வெங்கடேஸ்வரர் சுவாமி பிரம்மோற்சவம்
கல்யாண வெங்கடேசுவர சுவாமி கோயில் என்பது திருப்பதி அருகே சீனிவாசமங்கபுரத்தில் அமைந்துள்ள வைணவக் கோயில் ஆகும். ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கல்யாண வெங்கடேசுவரர் இங்கு அருள்புரிகிறார். இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு மூலம் இந்த கோயில் தேசிய முக்கியத்துவத்தின் பண்டைய நினைவுச்சின்னமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கோயில் 1967 முதல் 1981 வரை இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையத்தின் (ஏ.எஸ்.ஐ) கட்டுப்பாட்டிலிருந்தது. 1981ஆம் ஆண்டில் இந்த கோயில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது இந்த கோயிலைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (தி.தி.தே.) நிர்வகித்து வருகின்றது. இந்த ஆலயத்தில் இன்று முதல் பிப்ரவரி 26 வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. தினமும் காலையும் மாலையும் சுவாமி வெவ்வேறு வாகனத்தில் உலா வந்து அருட்காட்சி தர இருக்கின்றார்.
19.2.2025 – புதன் திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வரர் பிரமோற்சவம்
திருமலையில் உள்ள 1008 தீர்த்தங்களில், ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயில் திருப்பதி புஷ்கரிணி அல்லது ஆழ்வார் தீர்த்தம் மட்டுமே திருமலை மலைகளின் அடிவாரத்தில் உள்ள ஒரே புனித தீர்த்தமாகும். ஒரு பாறையில் இறைவனின் வலது கால் விரலில் இருந்து நீர் ஊற்றெடுக்கிறது, எனவே கபில தீர்த்தம் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்த தீர்த்தத்தின் கரையில் தவம் செய்து கொண்டிருந்த கபில ரிஷியை சிவனும் பார்வதியும் ஆசீர்வதித்ததால், இது கபில தீர்த்தம் என்று அழைக்கப்பட்டது. இந்த கோயிலில் உள்ள சிவன் திரு உருவச்சிலை கபிலா முனியால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. எனவே இங்குள்ள சிவன் கபிலேஸ்வரர் என்று குறிப்பிடப்படுகிறார். கோயிலில் உள்ள லிங்கம் சுயமாகத் தோன்றியது. தற்போது இந்த கோயில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் உள்ளது. வருடாந்திர திருவிழாக்கள் பெரும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இன்று முதல் 28ம் தேதி வரை பிரமோற்சவம் நடைபெறுகிறது.
20.2.2025 – வியாழன் மகேஸ்வராஷ்டமி
மாசி மாதத்து தேய்பிறை அஷ்டமி மகேஸ்வராஷ்டமி என்று அழைக்கப்படும். இதனை காலாஷ்டமி என்றும் சொல்வார்கள். அஷ்டமி தினம் பைரவர் வழிபாட்டுக்குச் சிறந்தது. ஆயுள் தோஷத்தை நீக்கக் கூடியது. சனிபகவானுக்கு பரிகாரமாக பைரவரை வணங்கலாம். அவர் பல்வேறு தொழில் பிரச்னைகளில் இருந்து விடுவிப்பார். பொதுவாகவே சிவாலயங்களில் முதல் வழிபாடு கணபதிக்கும், நிறைவு வழிபாடு பைரவருக்கும் செய்யப்படுகின்றது. பைரவரை காவல் தெய்வம் என்று கருதுவார்கள். நவகிரகங்களின் உயிர் தேவதையாக விளங்குபவர் பைரவர். அவருடைய உடலில் நவகிரகங்கள் மற்றும் 12 ராசிகள் இருக்கின்றன. அஷ்டமி நாளில் பைரவருக்கு வடை மாலை அணிவிக்கலாம். பைரவருக்கு மிளகை ஒரு துணியில் கட்டி, நல்லெண்ணையில் நனைத்து வைத்து விளக்கு ஏற்றினால், கஷ்டங்கள் விலகும். நிம்மதி பிறக்கும். கடன், வியாதி, எதிரி, போன்ற துன்பங்கள் முற்றிலும் விலகும். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் புது யுக்தி, முன்னேற்றம் ஏற்படும். காலையில் சிவன் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும். மாலையில் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு பைரவர் சந்நதிக்குச் சென்று வழிபட வேண்டும்.
20.2.2025 – வியாழன் யோகிராம்சுரத்குமார் நினைவு நாள்
பகவான் ஸ்ரீரமணர், ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் போன்ற மகான்களின் திருப்பாதம்பட்ட மண் திருவண்ணாமலை. இந்தப் புனித திருவண்ணாமலையிலே பக்தர்களுக்கு அருளியவர் `விசிறி சாமியார்’ என அழைக்கப்படும் பகவான் ஸ்ரீயோகிராம் சுரத்குமார். ஸ்ரீயோகிராம் சுரத்குமார் சுவாமிகள், வாரணாசிக்கு அருகில் உள்ள நர்தாரா கிராமத்தில் டிசம்பர் 1, 1918ம் ஆண்டில் ராம்தத் குன்வார் – குசும்தேவி தம்பதியருக்கு இரண்டாவது மகனாக அவதரித்தார். ஆன்மிக நாட்டம் மிக்கவர் இவர். ஆன்மிகத் தேடலில் ஈடுபட்டிருந்தவருக்கு திருவண்ணாமலை ஸ்ரீரமண தரிசனம் திருப்பம் தந்தது.
ஸ்ரீஅரவிந்தரைப் பற்றி அறிந்து, பாண்டிச்சேரியை நோக்கிப் பயணப்பட்டார். ஆனால், அவரை தரிசிக்க முடியவில்லை. மறுபடி திருவண்ணாமலை வந்தார். அடுத்து வடக்கே பயணப்பட்டார். இமயமலைச் சரிவுகளில் அலைந்தார். அந்தச் சமயத்தில் திருவண்ணாமலையில் ஸ்ரீரமண மகரிஷி முக்தியடைந்தார். பாண்டிச்சேரியில் அரவிந்தர் மறைந்தார் என்பது தெரியவர, இடிந்து போனார். மங்களூருக்கு அருகில் கஞ்சன்காடு கிராமத்தில் இருந்த பப்பா ராமதாஸரின் ஆஸ்ரமத்தில் தங்கினார். பப்பா ராமதாஸ் அவருக்கு ராம நாமத்தை உபதேசித்தார்.
“இடையறாது ராம நாமம் சொல்’’ என்றார். ராம்சுரத்குமார் குருவின் கட்டளையை மீறவில்லை. உடுப்பதும் உண்பதும்கூட மறந்து, ராம நாமம் சொல்வதே வேலையாக இருந்தது. மரத்தடி
களில் அமர்ந்து வேலைக்குப் போகாமல் திரும்பத் திரும்ப ராம நாமத்தையே சொல்லிக் கொண்டிருந்தார். தன்னந் தனியே கங்கைக் கரையோரம் திரிந்து கொண்டிருந்தார். அவர் குடும்பத்தை விட்டு மறுபடியும் திருவண்ணாமலை நோக்கிப் பயணப்பட்டார். திருவண்ணாமலைக்கு வந்தவர், ஒரு புன்னை மரத்தடியில் அமர்ந்து இடையறாது ராம நாமத்தைச் சொல்லிக் கொண்டே இருந்தார். ஸ்ரீஅரவிந்தரிடமிருந்து ஞானத்தையும், ரமண மகரிஷியிடமிருந்து தவத்தையும், சுவாமி ராமதாஸரிடமிருந்து `ஓம் ஸ்ரீ ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம்’ எனும் மந்திர தீட்சையும் பெற்றார்.
யோகிராம் சுரத்குமார் இறக்கும் வரை இந்த மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருந்தார். அவர் சித்தி அடைந்த தினம் இன்று. (பிப்ரவரி 20) தமிழகத்தின் பல ஊர்களிலும் யோகியின் சித்தி பெற்ற தினத்தை, அவருடைய பக்தர்கள் சிறப்பு பூஜைகளை மேற்கொள்வார்கள்.
The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.
