×

2வது ஒரு நாள் போட்டியில் நின்று வென்ற இலங்கை…வந்து நொந்த ஆஸ்திரேலியா: மெண்டிஸ் அதிரடி சதம்

கொழும்பு: ஆஸ்திரேலியாவுடனான 2வது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி அபாரமாக ஆடி 174 ரன் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றி உள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ஆஸி அணி 2 ஒரு நாள் போட்டிகளில் ஆடி வந்தது. முதல் போட்டியில் 49 ரன் வித்தியாசத்தில் வென்ற இலங்கை, கடைசி மற்றும் 2வது ஒரு நாள் போட்டியில் நேற்று மோதியது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்களில் ஒருவரான பதும் நிசங்கா 6 ரன்னில் வீழ்ந்தார்.

இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் நிஸன் மதுஸ்காவும், குஸால் மெண்டிசும் ஆஸி பந்து வீச்சை திணறடித்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். நிஸன் 51 ரன்னில் அவுட்டானார். மெண்டிஸ் அற்புதமாக ஆடி 11 பவுண்டரிகளுடன் 101 ரன் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினார். பின் வந்த கேப்டன் சரித் அசலங்கா 66 பந்தில் 78 ரன் விளாசினார். 50 ஓவர் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட் இழந்து 281 ரன் குவித்தது.  இதையடுத்து, 282 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸி களமிறங்கியது. துவக்க வீரர் மேத்யூ சார்ட் 2ல் வீழ்ந்தார். டிராவிஸ் ஹெட் 18 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 29, ஜோஷ் இங்லீஸ் 22, தவிர பிற வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் தந்தனர். இலங்கையின் நேர்த்தியான பந்து வீச்சால் 24.2 ஓவர்களில் ஆஸி ஆல் அவுட்டாகி 107 ரன் மட்டுமே எடுத்தது. ஆஸி வீரர்களில் 8 பேர் 10 ரன்னுக்கும் கீழ் ரன் எடுத்தனர். இதனால், 174 ரன் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இலங்கை 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. இலங்கையின் துனித் வெல்லலகே 4, வனிந்து ஹசரங்கா, அஸிதா பெர்னாண்டோ தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் குஸால் மெண்டிஸ்.

The post 2வது ஒரு நாள் போட்டியில் நின்று வென்ற இலங்கை…வந்து நொந்த ஆஸ்திரேலியா: மெண்டிஸ் அதிரடி சதம் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Australia ,Mendis ,Colombo ,Dinakaran ,
× RELATED 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸி.ஓபனில் அதிரடி காட்ட தயாராகும் வீனஸ்