×

விரைவில் செங்கல்பட்டு, மாமல்லபுரத்தில் நவீன போக்குவரத்து முனையங்கள் தமிழகத்தில் கிராமம், நகரங்களை மேம்படுத்த திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

* கடற்கரை, ஏரிகளை மேம்படுத்த சென்னை நீர்முனைய வளர்ச்சி திட்ட நிறுவனம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நகரம், கிராமங்களை மேம்படுத்த 10 மண்டல திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. கோவை, மதுரை, ஒசூர், சேலம், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, வேலூர் மற்றும் திருநெல்வேலியை உள்ளடக்கிய 136 நகரங்களுக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஓசூருக்கான முழுமைத் திட்டமும் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. கோயம்புத்தூர் மற்றும் மதுரைக்கான முழுமைத் திட்டம் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை வர்த்தக மையத்தில் கிரெடாய் பேர் புரோ 2025 தொடக்க விழாவில் பேசியதாவது: ரியல் எஸ்டேட் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டை உள்ளடக்கிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும் ஒரு முக்கியமான துறையாக அமைந்திருக்கிறது. நம்முடைய மாநில மக்கள் தொகையில், 48 விழுக்காடு மக்கள் நகர்ப்புறத்தில் வசிக்கிறார்கள். இதனால் நாம் மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக இருக்கிறோம். இது வரும் ஆண்டுகளில் மேலும் உயரும்.

இதனால், நீடித்து நிலைக்கக்கூடிய வீட்டு வசதிக்கான தேவைகள் அதிகரிக்கும். அதனால் புதுமையான நகரமைப்பு திட்டங்களை தீட்டவேண்டும். சென்னை பெருநகர பகுதிக்கான முதல் மற்றும் இரண்டாம் முழுமை திட்டங்கள் திமுக ஆட்சியில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது மூன்றாவது முழுமைத் திட்டத்தையும் அரசு தான் முனைப்போடு தயாரித்துக் கொண்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் நகரம், கிராமங்களை மேம்படுத்த 10 மண்டல திட்டங்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது. கோவை, மதுரை, ஒசூர், சேலம், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, வேலூர் மற்றும் திருநெல்வேலியை உள்ளடக்கிய 136 நகரங்களுக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஓசூருக்கான முழுமைத் திட்டமும் சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. கோயம்புத்தூர் மற்றும் மதுரைக்கான முழுமைத் திட்டம் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும்.

சென்னை மாநகரை சுற்றியிருக்கக்கூடிய 9 வளர்ச்சி மையங்களான மீஞ்சூர், திருவள்ளூர், திருமழிசை, மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மறைமலைநகர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் பரந்தூர் ஆகிய பகுதிகளுக்கு புதிதாக, புதுநகர் வளர்ச்சித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. புதுநகர் திட்டங்களின் நோக்கம் சென்னையின் நெரிசலை குறைக்க வேண்டும், பொருளாதார மையங்களை உருவாக்க வேண்டும், போக்குவரத்து இணைப்புகளை ஏற்படுத்த வேண்டும், சென்னை மாநகரை சுற்றியிருக்கக்கூடிய பகுதிகளில் நிலையான வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் இதுதான் நோக்கம். கடந்த 10 ஆண்டுகளில், இப்படிப்பட்ட திட்டங்கள் தயாரிக்கும் பணி தேக்கமடைந்து இருந்தது. அந்த நிலையை மாற்ற அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

சென்னையின் உட்பகுதிகளில் ஏற்படும் நெரிசலை தவிர்க்கவும், வெளிவட்ட சாலைகளுக்கு இணைப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து முனையங்களை பரவலாக்கவும் சி.எம்.டி.ஏ மூலமாக கிளாம்பாக்கம், மாதவரம் மற்றும் குத்தம்பாக்கம் ஆகிய இடங்களில் மூன்று புதிய புறநகர் பேருந்து முனையங்களை உருவாக்கியிருக்கிறோம். குத்தம்பாக்கம் பேருந்து முனையம் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. சென்னை பெருநகர மண்டல போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டின் நீண்டகால வளர்ச்சிக்கான இலக்கை அடைகின்ற வகையில் செங்கல்பட்டு மற்றும் மாமல்லபுரத்தில் நவீன போக்குவரத்து முனையங்கள் அடுத்த ஆண்டு திறக்கப்பட இருக்கிறது. சென்னையின் நீண்ட கடற்கரை பகுதியும், ஏரிகளும் இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் பெரும் கொடைகள் இதை மேம்படுத்த, தமிழ்நாடு அரசால் சென்னை நீர்முனைய வளர்ச்சி திட்ட நிறுவனம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த நிறுவனம், முதற்கட்டமாக, சென்னை மாநகரில் அமைந்திருக்கும் 12 ஏரிகள் மற்றும் 4 கடற்கரைப் பகுதிகளை தேர்வு செய்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் மக்கள் கூடும் இடங்களாக மேம்படுத்த ரூ.250 கோடி செலவில் திட்டம் தயாரித்திருக்கிறது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் 196 நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்கள், சுமார் 2 ஆயிரத்து 600 கோடி ரூபாய் முதலீட்டில், கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், செம்மஞ்சேரியில் அமையவுள்ள நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விளையாட்டு நகரம், தீவுத்திடலில் அமையவுள்ள உலகத்தரம் வாய்ந்த பொருட்காட்சி மையம் மற்றும் போரூர் நகர்ப்புறப் பகுதியில் அண்மையில் அமைக்கப்பட்ட பரந்து விரிந்த நன்செய் நிலப் பூங்கா ஆகியவை குறிப்பிடத்தக்க திட்டங்கள்.

இதனை செயல் வடிவாக்க தற்பொழுது நடைமுறையில் இருக்கும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் 2019ஐ புதுப்பிக்கும் செயல்பாடுகளில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முழு ஈடுபாட்டோடு செயலாற்றி வருகிறது. நான் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் போது பல முதலீட்டாளர்களை சந்திக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர்கள் பெரும்பாலும் என்னிடத்தில் கேட்டது என்னவென்றால், சென்னையிலும், மாநிலம் முழுவதும் இன்னும் கூடுதலாக தொழில் பூங்காக்களும், இன்னும் கூடுதல் அலுவலகக் கட்டிடம் தேவைப்படுகிறது என்று சொன்னார்கள். எனவே, மூலமாக இந்த தொழில்துறை கோரிக்கையை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். நீங்கள் கட்டக்கூடிய பெரிய அடுக்குமாடிக் கட்டிடத்தை அருகிலேயே இந்த பூங்காக்கள் நீர்நிலைகளை அழகுபடுத்த பராமரித்துக் கொள்வதற்கு உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

The post விரைவில் செங்கல்பட்டு, மாமல்லபுரத்தில் நவீன போக்குவரத்து முனையங்கள் தமிழகத்தில் கிராமம், நகரங்களை மேம்படுத்த திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Mamallapuram ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Chennai Waterfront Development Project Corporation ,Chennai ,Coimbatore ,Madurai ,Hosur ,Salem ,Tiruppur ,Tiruchirappalli ,Vellore ,Tirunelveli… ,Chengalpattu, Mamallapuram ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...