சென்னை: சென்னை தலைமைச் செலயகத்தில் மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டத்தில் விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயிலை சாலை மேம்பாலத்துடன் இணைத்து நீட்டிப்பதன் பரிந்துரைக்கான விரிவான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கோபாலிடம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் சமர்ப்பித்தார்.
மெட்ரோ ரயில் மற்றும் மேம்பாலச் சாலையின் ஒருங்கிணைந்த கட்டுமானத்தை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில், தமிழ்நாடு அரசுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கை திருத்தப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையின்படி, மெட்ரோ வழித்தடம் நிலை 2-ல் மற்றும் மேம்பாலச் சாலை நிலை முதலில் முன்மொழியப்பட்டுள்ளது. இது கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு தடையற்ற சாலை போக்குவரத்து மற்றும் மெட்ரோ இணைப்பை வழங்கும். வெளிவட்டச் சாலை உடன் இணைப்பதற்காக தாம்பரம் அருகே இடைநிலை சாய்வுப் பாதைகள் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த மேம்பாலச் சாலை நேரடியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் வந்து செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்படும்.
முன்மொழியப்பட்ட நீட்டிப்பு பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் மற்றும் வண்டலூர் வழியாகச் செல்லும், இது கிளாம்பாக்கம் பேருந்து முனையம், விமான நிலையம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையம் போன்ற முக்கிய போக்குவரத்து மையங்களுக்கு இணைப்பை வழங்கும். இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் லிவிங்ஸ்டோன் எலியாசர் மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post கிளாம்பாக்கம் வரை 15 கி.மீ. மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிப்பு appeared first on Dinakaran.
