×

சமுதாய நல மருத்துவமனைக்கு வந்தபோது மக்களுடன் இணைந்து நடிகர் கஞ்சா கருப்பு போராட்டம்

சென்னை: சென்னை போரூரில் பெருநகர சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் நேற்று காலை சிகிச்சைக்காக வந்திருந்தனர். அப்போது போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர். காலை 7 மணி முதல் புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகள் காத்திருந்தும் அவர்களுக்கு சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

நீண்ட நேரமாக காத்திருந்த பொதுமக்கள் அங்கிருந்த மருத்துவ பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நடிகர் கஞ்சா கருப்பு கால் வலிக்காக சிகிச்சை பெற இந்த மருத்துவமனைக்கு வந்தார். அவரும் நீண்ட நேரம் காத்திருந்தும் உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் காத்திருந்தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்தவர் அங்கிருந்து மருத்துவப் பணியில் இருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஏற்கனவே பொதுமக்கள் காத்திருந்த நிலையில் கஞ்சா கருப்பும் அவர்களுடன் இணைந்து மருத்துவமனை வாயில் முன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால் மருத்துவமனை வளாகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் நிருபர்களை சந்தித்து கஞ்சா கருப்பு கூறுகையில், ‘‘கால் வலிக்காக அரசு மருத்துவமனைக்கு வந்த எனக்கு ஊசி போட அவசியமில்லை என செவிலியர்கள் கூறுகிறார்கள் மருத்துவர்களும் இல்லை. தனியார் மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவப்பணியில் ஆட்கள் இருக்கும்போது அரசு மருத்துவமனையில் ஏன் மருத்துவர்கள் இருப்பது இல்லை. அரசு மருத்துவமனைக்கு வரக்கூடிய நபர்களின் உயிர் என்றால் அலட்சியமா’’ என்றார்.

The post சமுதாய நல மருத்துவமனைக்கு வந்தபோது மக்களுடன் இணைந்து நடிகர் கஞ்சா கருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : welfare hospital ,Chennai ,Chennai Municipal Municipal Community Welfare Hospital ,Chennai Borur ,Community Welfare Hospital ,
× RELATED வீட்டின் முன்பு திரண்டிருந்த...