×

பெரியபாளையம் அருகே ரூ.1.60 கோடியில் கட்டப்பட்ட அரசு மாணவர் விடுதி திறப்பு விழா எப்போது? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

ஊத்துக்கோட்டை: ஆரணி பேரூராட்சியில், கட்டி முடிக்கப்பட்டு மூடியே கிடக்கும் அரசு ஆதிதிராவிட நல மாணவர் விடுதியை திறந்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். பெரியபாளையம் அருகே, ஆரணி பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். வெளியூரில் இருந்து இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் இங்குள்ள ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்நிலையில், மாணவர்கள் விடுதி பழுதடைந்து காணப்பட்டதால் அதை அகற்றிவிட்டு புதிய விடுதி கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்பேரில், தாட்கோ திட்டம் மூலம் ரூ.1.60 கோடி செலவில் புதிய மாணவர் விடுதி கட்டப்பட்டது. இந்த மாணவர் விடுதி கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் மாணவர் விடுதி திறக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு முதல் இந்த விடுதிக்கு மாணவர்கள் சரிவர வராததால் விடுதி சில மாதங்களாகவே பூட்டியே கிடக்கிறது. இதனால், விடுதியை சுற்றி செடி, கொடிகள் படந்து, புதர்கள் மண்டி காணப்படுகிறது. எனவே, மாணவர்கள் இந்த விடுதியில் சேர்ந்து படிக்க முன்வர வேண்டும் எனவும், வீணாகும் கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post பெரியபாளையம் அருகே ரூ.1.60 கோடியில் கட்டப்பட்ட அரசு மாணவர் விடுதி திறப்பு விழா எப்போது? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Periyapalayam ,Uthukottai ,Adi Dravida Welfare Hostel ,Arani Town Panchayat ,Periyapalayam.… ,Dinakaran ,
× RELATED மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த வடமாநிலத்தவர் பரிதாப பலி