×

பெல்ட் ஏரியா மக்களுக்கு பட்டா வழங்கும் முடிவு விளிம்பு நிலைமக்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறது: முதல்வரின் அறிவுப்புக்கு விசிக எம்.எல்.ஏ பாராட்டு

சென்னை: பெல்ட் ஏரியா மக்களுக்கு பட்டா வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு விளிம்பு நிலை மக்களின், வயிற்றில் பால் வார்த்திருக்கிறது என்று விசிக எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி பாராட்டு தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளரும், திருப்போரூர் எம்எல்ஏவுமான எஸ்.எஸ்.பாலாஜி நேற்று வெளியிட்ட அறிக்கை: அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வந்த ஏழை எளிய மக்களுக்கு 1962 ல் இருந்து கிட்டத்தட்ட 60 ஆண்டு காலம், பெல்ட் ஏரியா என்கிற 1962 அரசாணை காரணம் காட்டி, பட்டா மறுக்கப்பட்டு வந்தது. நிதிநிலை அறிக்கை மானிய விவாத கோரிக்கையில், 12.04.23அன்று நடைபெற்ற வருவாய்த்துறை மானிய கோரிக்கையில், சட்டமன்றத்தில் பேசியிருந்தேன். அதனை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், இதுகுறித்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து இன்றைக்கு பெல்ட் ஏரியாவில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்குகின்ற ஒரு வரலாற்று சிறப்பு மிக்க முடிவை அமைச்சரவை கூட்டத்தில் எடுத்திருக்கிறார்.

இந்த முடிவு விளிம்பு நிலை மக்களின், வயிற்றில் பால் வார்க்கும் முடிவு. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றி. இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு, முயற்சிகளை முன்னெடுத்த வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஏனைய அமைச்சர்களுக்கும், தலைமை செயலாளர், வருவாய்த்துறை செயலாளர், உள்ளிட்ட இந்த முடிவை எட்டுவதற்கான நிர்வாக பணிகளை மேற்கொண்ட அரசின் பல்வேறு துறைகளில் உள்ள அலுவலர்கள், மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இத்தகைய மகத்தான சரித்திர சாதனை புரிந்துள்ள முதலமைச்சரிடம், மக்களின் மற்றோரு நீண்டநாள் கோரிக்கையான மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் வசிக்கக்கூடிய விளிம்புநிலை மக்களுக்கு மின்னிணைப்பும், பட்டாவும் வழங்குவது தொடர்பாகவும், உரிய நடவடிக்கை எடுத்திட பணிவோடு கேட்டு கொள்கிறேன்.

The post பெல்ட் ஏரியா மக்களுக்கு பட்டா வழங்கும் முடிவு விளிம்பு நிலைமக்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறது: முதல்வரின் அறிவுப்புக்கு விசிக எம்.எல்.ஏ பாராட்டு appeared first on Dinakaran.

Tags : V.S.K. MLA ,Chief Minister ,Chennai ,S.S. Balaji ,V.S. Balaji ,Deputy General Secretary ,Liberation Tigers of Tamil Nadu ,Thiruporur MLA ,Dinakaran ,
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...