- மோடி
- பிரான்ஸ்
- ஐக்கிய மாநிலங்கள்
- மக்ரோன்
- டிரம்ப்
- புது தில்லி
- நரேந்திர மோடி
- ஜனாதிபதி
- இம்மானுவேல் மக்ரோன்…
புதுடெல்லி: பிரதமர் மோடி 4 நாள் அரசு முறை பயணமாக நேற்று பிரான்ஸ், அமெரிக்கா புறப்பட்டுச்சென்றார். பிரதமர் நரேந்திரமோடி அரசு முறை பயணமாக நேற்று பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டுச்சென்றார். பிரதமரின் இந்த மூன்று நாள் பயணத்தின்போது அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் சேர்ந்து அங்கு நடக்கும் ஏஐ உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் உலகநாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் மற்றும் 100 நாடுகளை சேர்ந்த தலைவர்கள், அரசு உயரதிகாரிகள், தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த பயணத்தின்போது பிரதமர் மோடி, மேக்ரானுடன் இந்தியா-பிரான்ஸ் உறவு குறித்தும் அவற்றை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் அந்நாட்டின் வணிக தலைவர்களுடன் பிரதமர் மோடி உரையாற்றுகின்றார். தொடர்ந்து புதனன்று முதல் உலகப்போரில் உயிர் தியாகம் செய்த இந்திய வீரர்களின் தியாகங்களை நினைவுகூறும் வகையில் மசார்குஸ் போர் நினைவு சின்னத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்த உள்ளார்.
மேலும் அதிபர் மேக்ரானுடன் இணைந்து மார்சீலி நகரில் புதிய இந்திய தூதரகத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பின்னர் இரு நாட்டின் தலைவர்களும் இணைந்து தெர்மோநியூக்ளியர் அணுஉலை ஆராய்ச்சி மையத்திற்கு சென்று பார்வையிடுகின்றனர். இது பிரதமர் மோடியின் ஆறாவது பிரான்ஸ் பயணமாகும். முன்னதாக பிரான்ஸ் புறப்படுவதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், ‘’தொழில்நுட்பம், வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் அமெரிக்காவுடன் இந்தியாவின் கூட்டாண்மையை மேலும் உயர்த்தவும் ஆழப்படுத்துவதற்குமான திட்டத்தை உருவாக்குவதற்கு இந்த பயணம் உதவும். அதிபராக டிரம்ப் பதவியேற்றபின் இது முதல் சந்திப்பாகும். இரு நாட்டு மக்களின் பரஸ்பரநலனுக்காக நாங்கள் இணைந்து பணியாற்றுவோம். உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை வடிவமைப்போம்.
எனது நண்பர் அதிபர் டிரம்பை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அவரது முதல் பதவிக்காலத்தில் இணைந்து பணியாற்றியதை நான் மிகவும் அன்பான நினைவாக கொண்டுள்ளேன்’’என்று தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு நாளை அமெரிக்கா புறப்பட்டுச்செல்கிறார். வியாழக்கிழமையன்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசுகிறார். அப்போது, இந்தியர்கள் நாடு கடத்தல், இறக்குமதி வரி குறைத்தல் விவகாரம், வர்த்தக போர் மூளாமல் தடுப்பது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
* பிரான்ஸ், அமெரிக்க நிறுவனங்களை திருப்திபடுத்த திருத்தம்
காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ‘’கடந்த 2015ம் ஆண்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்பு சட்டம் 2010 மற்றும் அது தொடர்புடைய பிரச்னைகள் குறித்த கேள்விகள் மற்றும் பதில்கள் என்ற புத்தகத்தை வெளியிட்டது. இதில் இந்தியா அணுசக்தி சேதத்திற்கான சிவில் பொறுப்பு சட்டம் 2010 மற்றும் 2011ன் விதிகளை திருத்துவதற்கான திட்டம் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டு இருந்தது. ஆனால் பிப்ரவரி ஒன்றாம் தேதி நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் இந்த சட்டம் திருத்தப்படும் என்று அறிவித்தார். பிரதமர் மோடி அடுத்த நான்கு நாட்களுக்கு இந்த இரண்டு நாடுகளுக்கும் பயணம் செய்வதால் பிரான்ஸ், அமெரிக்க நிறுவனங்களை திருப்திபடுத்துவதற்காக இந்த யூ டர்ன் எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
The post 4 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் அமெரிக்கா பயணம்: மேக்ரான், டிரம்புடன் முக்கிய பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.
