பல்லாரி: கர்நாடகாவில் பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் உயிரிழந்தது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் பாஜக எம்எல்ஏ ஜனார்த்தன ரெட்டி மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ நாரா பரத் ரெட்டி ஆதரவாளர்களுக்கு இடையே அரசியல் ரீதியாகப் பனிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில், வால்மீகி சிலை திறப்பு விழாவையொட்டி விளம்பர பதாகைகள் (பேனர்கள்) வைப்பதில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஜனார்த்தன ரெட்டியின் வீட்டின் அருகே ஹவம்பாவி பகுதியில் திரண்ட இரு தரப்பினரும் கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர்.
அப்போது கூட்டத்தில் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த வன்முறையில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து ஜனார்த்தன ரெட்டி கூறுகையில், ‘என்னைத் தீர்த்துக்கட்டும் நோக்கில் திட்டமிட்ட சதி நடந்துள்ளது. நான் வீட்டிற்கு வந்தபோது மர்ம நபர்கள் என் மீது 4 முறை துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு காங்கிரஸ் எம்எல்ஏ பரத் ரெட்டி மற்றும் அவரது தந்தையே காரணம்’ என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்எல்ஏ பரத் ரெட்டி, ‘ஜனார்த்தன ரெட்டி தான் என் ஆதரவாளரின் கொலைக்குக் காரணம், அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார். வன்முறையைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தி வானத்தை நோக்கிச் சுட்டனர். இச்சம்பவம் தொடர்பாக ஜனார்த்தன ரெட்டி மற்றும் முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு உட்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நகரில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
