×

கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கு விழுப்புரம் இளம்சிறார் நீதிமன்றத்தில் 52 சிறுவர்கள் ஆஜர்

விழுப்புரம், பிப். 8: கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி கலவரவழக்கு தொடர்பாக விழுப்புரம் இளம் சிறார் நீதிமன்றத்தில் 52 சிறுவர்கள் நேரில் ஆஜரானார்கள். வருகிற 21ம் தேதி குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி, கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், 2022 ஜூலை 17ம் தேதி மாணவி மரணத்துக்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் எனக் கூறி, பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள், பள்ளிக்குள் நுழைந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீ வைத்து எரித்ததுடன், பொருட்களையும் திருடிச் சென்றனர்.

இந்த கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டன. அதில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். அதேபோல், மாணவி இறப்பு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டு வழக்குபதிவு செய்து மாணவி மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. கனியாமூர் தனியார் பள்ளி கலவரம் தொடர்பாக மொத்தம் 916 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் 53 பேர் இளம்சிறார்கள் ஆவர். அவர்கள் மீதான வழக்கு விசாரணை மட்டும் விழுப்புரம் இளம்சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.

நேற்று நீதிபதி ராதிகா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது 52 இளம் சிறார்கள் நேரில் ஆஜரானார்கள். ஒரே ஒரு இளம்சிறார் மட்டும் ஆஜராகவில்லை. தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். அன்றையதினம் குற்றப்பத்திரிக்கை நகல்வழங்க உள்ளதால் அனைவரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணையையொட்டி நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கலவர வழக்கில் 41,250 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கில் 41,250 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை மேற்கொண்ட வகையில் தனியார் பள்ளியை சேதப்படுத்திய விவகாரத்தில் 21 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிக்கை, காவல்துறை வாகனத்தை சேதபடுத்திய விவகாரத்தில் 10 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிக்கை, உயர் அதிகாரிகளை தாக்கிய விவகாரத்தில் 9 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிக்கை, பசுமாடுகளை துன்புறுத்திய விவகாரத்தில் 150 பக்க குற்றப்பத்திரிக்கை என சிறப்பு புலனாய்வு குழு மொத்தம் 4 வழக்குகளில் 41 ஆயிரத்து 250 பக்கம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இதில் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் 40,150 பக்கங்களும், விழுப்புரம் சிறார் நீதிமன்றத்தில் 1100 பக்கங்களும் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் குற்றவாளியாக உயிரிழந்த மாணவி மதியின் தாயார் செல்வி பெயரும், இரண்டாவது குற்றவாளியாக விசிக பிரமுகர் திராவிடமணி பெயரும் இடம் பெற்றுள்ளது.

The post கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கு விழுப்புரம் இளம்சிறார் நீதிமன்றத்தில் 52 சிறுவர்கள் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Villupuram Juvenile Court ,Kaniyamoor ,Villupuram ,Kallakurichi ,Kaniyamoor Private ,School Riot ,Chinnasalem ,Private ,School ,Dinakaran ,
× RELATED ஓய்வூதியர் தின விழா