×

என்ஐஏ மற்றும் ஐடி சோதனையில் திடீர் திருப்பம்; ராயப்பேட்டை தொழிலதிபர் வீட்டில் ரூ9.48 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல்

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் கட்டுமான நிறுவன தொழிலதிபர் யாக்கூப் பேக் வீட்டில் என்ஐஏ மற்றும் வருமான வரித்துறை சோதனையில் கட்டுக்கட்டாக ரூ.9.48 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த சென்னை மாநகர காவல்துறைக்கு கடிதம் மூலம் பரிந்துரை செய்துள்ளளனர். சென்னை ராயப்பேட்டை பூரம் பிரகாசம் சாலையில் யாக்கூப் பேக் (55) என்பவர் வசித்து வருகிறார். தொழிலதிபரான இவர், கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் 4ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்ஐஏ) இணைந்து சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது கணக்கில் வராத ரூ.50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து யாக்கூப் பேக் வீட்டின் ரகசிய அறையில் சோதனை செய்த போது என்ஐஏ மற்றும் ஐடி அதிகாரிகள் அதிர்ச்சி அடையும் வகையில் கட்டுக்கட்டாக ரூ.500, ரூ.2000 நோட்டுகள் மலைபோல் குவித்து வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த நோட்டுகளை ஆய்வு செய்த போது அனைத்தும் கள்ள நோட்டுகள் என தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போது கள்ள நோட்டுகள் அனைத்தும் வெளிநாடுகளில் அச்சடிக்கப்பட்டு கடல் மார்க்கமாக சென்னைக்கு கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் என்ஐஏ அதிகாரிகள் ரூ.9.48 மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து ராயப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறைக்கு கடிதம் மூலம் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் உயர் அதிகாரிகள் உத்தரவின்படி ராயப்பேட்டை போலீசார் தொழிலதிபர் யாக்கூப் பேக்கிடம் ரூ.9.48 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகள் எதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டது? புழக்கத்தில் விட பதுக்கி வைக்கப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post என்ஐஏ மற்றும் ஐடி சோதனையில் திடீர் திருப்பம்; ராயப்பேட்டை தொழிலதிபர் வீட்டில் ரூ9.48 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : NIA ,Royapettah ,Chennai ,Income Tax Department ,Yakub Beg ,Royapettah, Chennai ,Chennai Metropolitan Police ,Dinakaran ,
× RELATED செவிலியர் பணிக்கு காலி பணியிடங்களே...