×

தொகுதி கேட்கலயா? பாஜவை விளாசும் பாமக

தமிழகத்தில் உள்ள தேஜ கூட்டணியில் அதிமுக, பாஜ, பாமக (அன்புமணி), அமமுக இடம் பெற்றுள்ளன. இதே கூட்டணி புதுச்சேரியிலும் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் தொடர்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலை போல் என்ஆர் காங்கிரஸ் 16 , பாஜ 14 என தொகுதி பங்கீடு முடிவடைந்து உள்ளது. கூட்டணி உள்ள அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சி, பாமகவுக்கு இதுவரை எந்த தொகுதியும் ஒதுக்கப்படவில்லை. பாஜவுக்கு ஒதுக்கிய 14 தொகுதிகளில் அதிமுகவுக்கு 2, லட்சிய ஜனநாயக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் கூட்டணியில் உள்ள பாமகவுக்கு கடந்த முறை ஒரு சீட் கூட தரவில்லை. இதேநிலைதான் இந்த தேர்தலிலும் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. இதை உறுதிப்படும் விதமாக, பாமக போட்டியிட தொகுதி எதுவும் கேட்கவில்லை என பாஜ மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்து உள்ளார். இது, பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மாநில அமைப்பாளர் கோபி என்ற கோபாலகிருஷ்ணன் கூறும்போது, ‘‘கடந்த பிப்ரவரி 25ம் தேதி பாமக தலைவர் அன்புமணி புதுச்சேரி அமைப்பாளர்களை அழைத்து பேசினார். அப்போது, முதல்வர் ரங்கசாமி, பாஜ மாநில தலைவர் ராமலிங்கம் ஆகியோரை சந்தித்து புதுச்சேரி கூட்டணி சம்பந்தமாக பேசுவதற்கு தேதி வாங்குங்கள். பேச்சுவார்த்தைக்கு தமிழக பாமக நிர்வாகிகளை அனுப்பி வைக்கிறேன் என்று தெரிவித்தார்.

அதன்படி நாங்களும் கடந்த பிப்ரவரி 26, மார்ச் 7 மற்றும் 13 ஆகிய தேதிகளில் முதல்வர் ரங்கசாமி, பாஜ மாநில தலைவர் ராமலிங்கம் ஆகியோரை நேரில் சந்தித்து கூட்டணி இடங்கள் குறித்து பேசினோம். ஆனால் அவர்கள் பிடி கொடுக்காமல் இன்று, நாளை என்று இழுத்தடித்து வருகின்றனர். கூட்டணி கட்சியுடன் இந்த செயல்பாடு மன வருத்தத்தையும், வேதனையையும் தருவதாக உள்ளது. கூட்டணி இடங்கள் சம்பந்தமாக எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’’ என்றார். பாஜ மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பேச்சுக்கு பாமக எதிர்ப்பு தெரிவித்து போர்க்கொடி உயர்த்தியுள்ளது புதுச்சேரி தே.ஜ. கூட்டணியில் புயலையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : PMK ,BJP ,Teja alliance ,Tamil Nadu ,AIADMK ,Anbumani ,AMMK ,Puducherry ,NR Congress ,
× RELATED கரூரில் 41 பேர் பலியான விவகாரம்: நடிகர்...