கோவை: கோவை அன்னூர் அருகே வேலை முடிந்து நள்ளிரவு வீடு திரும்பிய 4 தொழிலாளர்களை விடிய விடிய தாக்கி ஜிபே-வில் பணம் பறித்து காதலிக்கு பணம் அனுப்பிய வாலிபர் உள்பட 5 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். உ.பி.யை சேர்ந்தவர் ராகேஷ், சஞ்சய், ராஜேஷ், நிஷாந்த், சுபாஷ். இவர்கள் 4 பேரும் கோவை அன்னூர் அடுத்த மாசாண்டிபாளையத்தில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்கள். கடந்த 1ம் தேதி இரவு வேலை முடிந்து வீட்டுக்கு புறப்பட்டனர்.
கெம்மநாயக்கன்பாளையம், பாலாஜி நகர் வந்தபோது இவர்களை 5 பேர் கும்பல் கத்தி, உடைந்த பீர்பாட்டிலுடன் வழிமறித்து 3 செல்போன்களை பறித்து பாஸ்வேர்டை கேட்டு தாக்கி சுபாஷின் ஜிபே-வில் இருந்த ரூ.25 ஆயிரத்தை அபகரித்தனர். வீட்டில் உள்ள ஏடிஎம் கார்டுகளை எடுத்து வரும்படி ஒருவரை மிரட்டி அனுப்பினர். அவர் நைசாக தங்களுடன் பணிபுரியும் ரமேஷ், சாமியப்பன், ராஜேந்திரன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். தொழிலாளர்கள் கொள்ளை கும்பலை பிடிக்க ஆவேசமாக விரைந்தனர். இவர்களை பார்த்ததும் கொள்ளை கும்பல் பைக்கில் தப்பினர்.
அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டது கிருஷ்ணகவுண்டன் புதூரை சேர்ந்த கமலேஷ் (21), பூபதி (22), சந்தோஷ் (22), லோகேஷ் (25), விஜய் (22) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இதில் கமலேஷ், பூபதி, சந்தோஷ் ஆகியோர் மீது ஏற்கனவே கஞ்சா, அடிதடி வழக்கு என பல காவல் நிலையங்களில் வழக்கு உள்ளது தெரிய வந்தது. முட்புதரில் கிடந்த செல்போன்களை மீட்டு போலீசார் சோதனை செய்ததில் கமலேஷ் வழிப்பறி பணத்தை தஞ்சாவூரில் உள்ள தனது காதலிக்கு அனுப்பியது தெரியவந்தது. காதலியிடம் இருந்த ரூ.25 ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஆயுதம், பைக்குகளை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரையும் சிறையில் அடைத்தனர்.
The post தொழிலாளர்களை தாக்கி ஜிபே-வில் பணம் பறிப்பு: கோவையில் நள்ளிரவில் துணிகரம் appeared first on Dinakaran.
