அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி கடைவீதியில் செயல்படும் பத்துக்கும் மேற்பட்ட இறைச்சிக்கடைகளை வேறு இடத்திற்கு மாற்றவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு இருக்கும் சாலைகள் குறுகலான சாலைகள் என்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது உண்டு. அரவக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகம் பின்புறம் செயல்படும் 10க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகளால் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் இறைச்சி கடைகளில் ஏற்படும் துர்நாற்றங்களால் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அருகில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கண்டபடி சுற்றித்திரியும் தெரு நாய்கள் இறைச்சி கடைகளில் வீசப்படும் இறைச்சியை தின்றுவிட்டு அருகில் இருப்பவர்களை கடிக்க செய்கிறது. இதனால் இச்சாலையைக் கடக்கும் போது ஒருவித பதற்றத்துடனேயே கடக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
மேலும் சார்பதிவாளர் அலுவலகம் சென்றுவர பயன்படுத்தப்படும் இச்சாலையனது குறுகலான சாலை என்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வருபவர்கள் இறைச்சி கடையின் துர்நாற்றம் வீசுவதால் ஒரு விதமான அருவருப்புடனேயே வந்து செல்கின்றனர். இதனால் அரவக்குறிச்சி மையப்பகுதியில் செயல்படும் பத்துக்கும் மேற்பட்ட இறைச்சி கடைகளை அரவக்குறிச்சி வெளிப்புறத்தில் மாற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post அரவக்குறிச்சி கடைவீதியில் இறைச்சி கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் appeared first on Dinakaran.
