×

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 3ம் காலாண்டு நிகர லாபம் ரூ300 கோடி: நிர்வாக இயக்குநர் சலீ எஸ்.நாயர் தகவல்


சென்னை: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 3ம் காலாண்டிற்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை அறிக்கைப்படி நிகர லாபம் ரூ300 கோடியாக உள்ளதாக வங்கியின் நிர்வாக இயக்குநர் சலீ எஸ்.நாயர் தெரிவித்தார். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் இயக்குநர் குழு கூட்டம், தூத்துக்குடியில் நடந்தது. கூட்டத்தில் 2024-25ம் நிதியாண்டின் 3ம் காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை அறிக்கை முடிவுகள் இறுதி செய்யப்பட்டது. இதனை வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான சலீ எஸ்.நாயர் வெளியிட்டு கூறியதாவது: தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு 1921ம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு ஒவ்வொரு ஆண்டும் லாபம் ஈட்டி வருகிறது. 572 கிளைகளுடன் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் சுமார் 5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த காலாண்டில் முக்கிய நகரங்களில் 5 புதிய கிளைகள் திறக்கப்பட்டு உள்ளன. மேலும் டெலாய்ட், ஆரக்கிள், பஜாஜ் ப்ரோக்கிங் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து, வங்கியின் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயல்திறன் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இது போன்ற நடவடிக்கைகள், பொறுப்பான கடன் வழங்கல் உள்ளிட்டவற்றால் வங்கி லாபகரமான வளர்ச்சிக்கான பாதையில் செல்ல உதவும். செயல்பாட்டு லாபத்தில் கடந்த 2023-24 மூன்றாம் காலாண்டில் ரூ370 கோடியில் இருந்து, தற்போது ரூ408 கோடியாக 10 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. நிகர லாபம் ரூ284 கோடியில் இருந்து ரூ300 கோடியாக 6 சதவீதம் உயர்ந்துள்ளது. வட்டியில்லாத வருமானம் ரூ158 கோடியில் இருந்து ரூ189 கோடியாக உயர்ந்து, 20 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்த வராக்கடன் 1.69 சதவீதத்தில் இருந்து 1.32 சதவீதமாக குறைந்துள்ளது. நிகர வராக்கடன் 0.98ல் இருந்து 0.41 சதவீதமாகக் குறைந்துள்ளது.

பங்கின் புத்தக மதிப்பு ரூ484.25ல் இருந்து ரூ550.38 ஆக அதிகரித்துள்ளது. மொத்த வணிக வளர்ச்சி 10 சதவீதத்தை கடந்துள்ளது. வைப்புத்தொகை ரூ46,799 கோடியில் இருந்து ரூ50,392 கோடியாக உயர்ந்துள்ளது. கடன் தொகை ரூ43,650 கோடியாக உயர்ந்துள்ளது. நிகர வட்டி வருமானம் ரூ570 கோடியாக உள்ளது. நிகர மதிப்பு ரூ8,715 கோடியாக உயர்ந்துள்ளது. உலகளாவிய என்ஆர்ஐ மையம், வெளிநாடு வாழ் இந்தியர்களின் நிதி தேவைகளுக்கு சேவை செய்ய அர்ப்பணிக்கப்பட்டது. பரிவர்த்தனை வங்கி குழுவானது திறமையான கார்ப்பரேட் வங்கி சேவைகளை வழங்குவதில் நிபுணத்துவத்துடன் செயலாற்றி வருகிறது. கடன் மேலாண்மை மையமானது, கடன் இடர் மதிப்பீடு மற்றும் மேலாண்மை செயல்முறைகளை ஒழுங்குபடுத்துதல், மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. மொத்தத்தில் வங்கியானது, அதன் பங்குதாரர்களுக்கு உயர் மதிப்பை வழங்கும் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.  இவ்வாறு கூறினார்.

The post தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 3ம் காலாண்டு நிகர லாபம் ரூ300 கோடி: நிர்வாக இயக்குநர் சலீ எஸ்.நாயர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Mercantile Bank ,Managing Director ,Sali S. Nair ,Chennai ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED திருப்படி திருவிழாவை ஒட்டி திருத்தணி...