×

வெங்கல் ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் குடிநீர் நீர்தேக்க தொட்டி: புதிதாக கட்டித்தர கோரிக்கை


பெரியபாளையம்: வெங்கல் ஊராட்சியில், பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை அகற்றிவிட்டு, புதிய குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே, வெங்கல் ஊராட்சியில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வெங்கல்லில் இருந்து சீதாஞ்சேரி செல்லும் சாலை, அம்பேத்கர் மன்றம் அருகே 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் சுமார் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு தண்ணீர் சேமிக்கப்பட்டு இங்கிருந்து அம்பேத்கர் நகர், அண்ணா தெரு, கம்பர் தெரு, காந்தி தெரு, பஜார் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது, இந்தத் தொட்டியின் தூண்கள் மிகவும் பழுதடைந்து, அதில் உள்ள கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்த படி ஆபத்தான நிலையில் உள்ளன. இந்த தொட்டியானது சரிந்து கீழே விழுந்தால் அப்பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே, இந்த பழைய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை கட்டித் தர வேண்டுமென பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித் தர அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

சுத்திகரிப்பு நிலையம் மூடல்
பெரியபாளையம் அருகே உள்ள வெங்கல் கிராமத்திற்கு கடந்த 2018-2019ம் ஆண்டு ரூ10 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது. இதனையடுத்து, இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. ஆனால், சில மாதங்கள் மட்டுமே ஊராட்சி சார்பில், கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அதன்பிறகு, குடிநீர் விநியோகம் செய்வதற்கு ஆள் இல்லாத காரணத்தால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால், இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post வெங்கல் ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் குடிநீர் நீர்தேக்க தொட்டி: புதிதாக கட்டித்தர கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vengal panchayat ,Periyapalayam ,Ellapuram Union ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் 21-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்