×

கலசபாக்கம் அருகே ராஜராஜ சோழன் காலத்தில் கட்டிய சுயம்பு நாதீஸ்வரர் கோயிலில் 200 ஆண்டுக்கு பிறகு திருப்பணி

*தொல்லியல் துறையினர் ஆய்வு

கலசபாக்கம் : கலசப்பாக்கம் அருகே சிறுவள்ளூர் கிராமத்தில் ராஜராஜ சோழன் ஆட்சி காலத்தில் 11ம் நூற்றாண்டில் கட்டிய சுயம்பு நாதீஸ்வர் கோயிலில் 200 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணி மேற்கொள்ள தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியம் சிறுவள்ளூர் கிராமத்தில் ராஜராஜ சோழன் காலத்தில் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட காமாட்சி அம்மன் சமேத சுயம்பு நாதீஸ்வரர் கோயிலில் முகலாய பேரரசு ஆட்சி காலத்தில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2019ம் ஆண்டு கோயில் மீது இடிதாங்கி சேதம் அடைந்தது.

வழக்கமாக சிவன் கோயில்களில் நுழைவாயிலில் விநாயகர் சன்னதி இருப்பது வழக்கம். ஆனால் பரிகார தளமாக விளங்கும் இக்கோயிலில் நுழைவு வாயிலில் தலையெழுத்தை மாற்றும் பிரம்மா சிலை, அதிகார நந்தி பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தது.

மேலும் சிவன் சன்னதி அம்பாள் சன்னதி என தனித்தனியே இருந்து வந்த நிலையில் 200 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் எனில் அம்மன் சன்னதி சிவன் சன்னதி இரண்டும் ஒரே கருவறையில் அமைத்து வழிபட வேண்டும். அவ்வாறு வழிபட்டால் வெள்ளப்பெருக்கில் இருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்படுவர் என ரிஷிகள் தெரிவித்ததால் அம்மன்- சிவன் இரண்டும் ஒரே கருவறையில் வைத்து வழிபட்டனர்.

அதன் பிறகு பொதுமக்கள் மழை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கப்பட்டனர் என்பது இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க இக்கோயில் பராமரிப்பு இல்லாமல் கோயில் முழுவதும் முட்புதர்கள் அடர்ந்து காணப்படுகிறது.

ஏற்கனவே கலைஞர் முதல்வராக இருந்தபோது திமுக ஆட்சியில் அப்போதைய கலெக்டர் ராஜேந்திரன் திருப்பணி மேற்கொள்ள ஆய்வு மேற்கொண்டார். ஆனால் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு இத்திட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் வரலாற்று சிறப்புமிக்க கோயில் திருப்பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து எம்எல்ஏ பெ.சு.தி.சரவணனிடம் வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து எம்எல்ஏ தமிழக அரசிடம் வலியுறுத்தியதின் பேரில் திருப்பணி மேற்கொள்ள இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் பணி மதிப்பீடு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்து சமய அறநிலை துறை மூலம் தொல்லியல் துறை அதிகாரிகள் நேற்று சிறுவள்லூர் கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன் சமேத சுயம்பு நாதீஸ்வரர் கோயிலில் உள்ள கல்வெட்டுக்களை ஆய்வு செய்தனர்.

மேலும் இதேபோல் வீரலூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வேணுகோபால சுவாமி கோயில் அணியாலை கிராமத்தில் 16ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசால் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற சிவன் கோயில் ஆகியவற்றை தொல்லியல் துறையினர் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
விரைவில் பிரசித்தி பெற்ற கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதால் பொதுமக்களும் பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post கலசபாக்கம் அருகே ராஜராஜ சோழன் காலத்தில் கட்டிய சுயம்பு நாதீஸ்வரர் கோயிலில் 200 ஆண்டுக்கு பிறகு திருப்பணி appeared first on Dinakaran.

Tags : Thirupani ,Suyambu Nadishwarar Temple ,Rajaraja Chozhan ,Kalasapakkam ,Galasapakkam ,Suyambu Nathishwar Temple ,Niruvallur ,Tiruvannamalai District ,Tirupani ,Dinakaran ,Rajaraja ,Chozhan ,
× RELATED நெல்லை மருத்துவக் கல்லூரி...