×

அரசின் உதவிகள் பெறமுடியாத நிலை மாற்றப்பட்டு தகுதியுள்ள வீரர்களுக்கு உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

* தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி பேச்சு

சென்னை: சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர்களுக்கான கேரம் விளையாட்டு போட்டிகள் 2 நாட்கள் நடத்தப்பட்டன. தொடக்க விழாவில் செய்தித்துறை இயக்குநர் வைத்திநாதன் பங்கேற்று போட்டிகளை தொடங்கினார். நிறைவு விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.  கேரம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2ம் பரிசு ரூ.5 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.2000ம் வழங்கப்பட்டது.

மேலும் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையும், போட்டியில் பங்கேற்ற அணிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. விழாவில் பரிசுகளை வழங்கி மேகநாத ரெட்டி பேசியதாவது: தமிழக விளையாட்டு துறை சார்பில் அகில இந்திய அளவில் பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறோம். இளைஞர்கள், மாணவர்களை பல்வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் போட்டிகளில் கலந்துகொள்ள அரசு சார்பில் அனுப்பி வைத்துள்ளோம்.

சில காரணங்களால் ஆர்வமுள்ள தகுதியுள்ள நபர்களுக்கு அரசு மூலம் உதவி செய்ய முடியாத நிலை இருந்தது. இதனால் தனியாக ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்தி அதன் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு, உதவிகள் செய்து வீரர்களாக ஆக்கியுள்ளோம். உதாரணமாக, சைக்கிள் போட்டியில் ஆர்வமுள்ள மாணவிக்கு சைக்கிள் கூட இல்லை என்று பத்திரிகை செய்தி வெளியானதை பார்த்த துணை முதல்வர், அந்த மாணவிக்கு விலை உயர்ந்த சைக்கிளை வாங்கி கொடுத்து போட்டிகளில் கலந்து கொள்ள உதவினார்.

பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் வாங்கி மாநிலம் முழுவதும் பல்வேறு ஊர்களில் இளைஞர்களுக்கு வழங்கியுள்ளோம். தமிழக விளையாட்டு துறை எடுத்து வரும் பல முயற்சிகள் மூலம் சர்வதேச போட்டிகளில் தமிழக இளைஞர்கள் கலந்து கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post அரசின் உதவிகள் பெறமுடியாத நிலை மாற்றப்பட்டு தகுதியுள்ள வீரர்களுக்கு உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது appeared first on Dinakaran.

Tags : Meganatha Reddy ,Tamil Nadu Sports Development Commission ,Speech Chennai: Caram Games for Journalists ,Chennai Press Forum ,Director of Press Department ,Vaithnath ,
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ...