×

வந்தாங்க…அவுட்டானாங்க…போனாங்க…ரஞ்சி போட்டியில் முன்னணி வீரர்கள் சொதப்பல்: ரோகித் 3, ஜெய்ஸ்வால், கில் 4, பண்ட் 1, ரஹானே 12, ஸ்ரேயாஸ் அய்யர் 11

மும்பை: ரஞ்சி போட்டியில் இந்திய அணி முன்னணி வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறியனர். இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரை 3-0 ஒயிட் வாஷானது. இதன்பின் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இந்திய அணி, பார்டர் கவாஸ்கர் தொடரில் படுமோசமாக விளையாடி 5 போட்டி கொண்ட தொடரை 3-1 என்ற இழந்து சொந்த ஊருக்கு திரும்பியது. இந்த இரு தொடரில் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களே எடுத்தனர்.

அவர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனால் முன்னணி வீரர்கள் ரஞ்சி போட்டிகளில் விளையாடி தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறி இருந்தார். இதையடுத்து, இந்திய அணி வீரர்கள் அனைவரும் ரஞ்சியில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ அறிவுறுத்தி இருந்தது. அதன்படி, முன்னணி வீரர்கள் ரஞ்சி போட்டிகளில் விளையாட தயாரானார்கள்.

இந்திய ஒருநாள் அணி மற்றும் டெஸ்ட் அணி கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா 10 ஆண்டுகளுக்கு பின் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக களமிறங்கினார். அனைவரது கண்களும் இவர் மீது இருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் வெறும் 31 ரன்கள் மட்டுமே ரோகித் சர்மா எடுத்திருந்தார். இதனால் வரவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக தனது பார்மை நிரூபிக்க இந்த ரஞ்சி போட்டி உதவும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ரோகித் சர்மா 3 (19 பந்து) ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இவருடன் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி ஜெய்ஸ்வாலும் 4 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து கேப்டன் ரஹானே 12 ரன், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்து உள்ள ஸ்ரேயாஸ் அய்யர் 11, ஷிவம் துபே 0 ரன் என முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து நடை கட்டினர்.

சவுராஷ்டிரா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணிகாக களமிறங்கிய ரிஷ்ப் பண்ட் ஒரு ரன்னில் ஜடேஜா பந்து வீச்சில் வெளியேறினார். சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இந்திய அணி துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள சுப்மன் கில் பஞ்சாப் அணிக்காக களமறிங்கினார். பெங்களூரு சின்னசாமி மைதனாத்தில் கர்நாடகா அணிக்கு எதிராக விளையாடிய கில் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். ரஞ்சி போட்டியில் விளையாட பிசிசிஐ வலியுறுத்தியும் நேற்று கோஹ்லி (ரயில்வே), ராகுல் (கர்நாடகா) உட்பட பலர் விளையாடவில்லை.

The post வந்தாங்க…அவுட்டானாங்க…போனாங்க…ரஞ்சி போட்டியில் முன்னணி வீரர்கள் சொதப்பல்: ரோகித் 3, ஜெய்ஸ்வால், கில் 4, பண்ட் 1, ரஹானே 12, ஸ்ரேயாஸ் அய்யர் 11 appeared first on Dinakaran.

Tags : Ranji Trophy ,Rohit 3 ,Jaiswal ,Gill ,Pant 1 ,Rahane ,Shreyas Iyer ,Mumbai ,New Zealand ,Indian ,Australia ,Border… ,Ranji ,Rohit ,Gill 4 ,Dinakaran ,
× RELATED வெ.இ.க்கு எதிரான 3வது டெஸ்டில்: வெற்றி...