×

மகாகும்பமேளாவில் 10 கோடி பக்தர்கள் புனித நீராடல்: உ.பி. அரசு தகவல்

மகாகும்ப நகர்: மகாகும்பமேளாவில் நேற்று மதியம் 12 மணி வரை 10 கோடி பக்தர்கள் புனித நீராடி உள்ளதாக உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய ஆன்மீக, கலாசார நிகழ்வுகளில் ஒன்றான மகாகும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆறுகள் சங்கமிக்கும் பகுதியில் நடக்கும் இந்த ஆண்டு திருவிழா கடந்த 13ம் தேதி தொடங்கியது. அடுத்த மாதம் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ள இந்த மாபெரும் ஆன்மீக நிகழ்வுக்கு உலகம் முழுவதுமிருந்து 45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகாகும்பமேளா திருவிழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக 10,000 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்பமேளா பகுதிக்கு எளிதாக வர புதிதாக 1,575 பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளதுடன், வாகனங்களை நிறுத்த 1,800 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடங்கள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு கும்பமேளா நடக்கும் பிரயாக்ராஜ் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதித்துள்ள மாநில அரசு, நிகழ்ச்சி நடக்கும் இடங்களை சுற்றி 2,750 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று மதியம் 12 மணி வரை மகாகும்பமேளாவில் 10 கோடி பக்தர்கள் புனித நீராடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில அரசு வௌியிட்டுள்ள அறிக்கையில், “ மகாகும்பமேளாவுக்கு வரும் யாத்ரீகர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதன்படி வியாழன்(நேற்று) மதியம் 12 மணி வரை 10 கோடி பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். நேற்று மட்டும் 20 லட்சம் யாத்ரீகர்கள் புனித நீராடி உள்ளனர். அதிகபட்சமாக கடந்த மகரசங்கராந்தியன்று சுமார் 3.5 கோடி பக்தர்கள் புனித நீராடினர். பவுஷ் பூர்ணிமா தினத்தன்று 1.7 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மனதை கவர்ந்த அழகி
இதுவரை 10 கோடி பேர் புனித நீராடிய கும்பமேளாவில் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த பாசி மணி, ஊசி மணி விற்கும் இளம்பெண் மோனலிசா போஸ்லே இணையதளத்தில் பிரபலமாகி உள்ளார். மோனலிசாவின் மோகப்பார்வையில் இணையதளம் திணறிக்கொண்டு இருக்கிறது. அவரைத்தேடிப்பிடித்து செல்பி எடுக்கும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அவரது தந்தையும், சகோதரர்களும் திண்டாடுகிறார்கள். யூடியூபர்களும் தேடி அலைகிறார்கள். வேறு வழியில்லாமல் மோனலிசாவை சொந்த ஊருக்கே அனுப்பி வைத்துவிட்டார் அவரது தந்தை. அவரை திரைப்படத்தில் நடிக்க வைக்க ஆசைப்படுவதாக இயக்குனர் சனோஜ் மிஸ்ரா கூறியுள்ளார்.

The post மகாகும்பமேளாவில் 10 கோடி பக்தர்கள் புனித நீராடல்: உ.பி. அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Mahakumbha Nagar ,Uttar Pradesh government ,Mahakumbh Mela ,Prayagraj, Uttar Pradesh ,Ganges ,Yamuna ,Government ,
× RELATED ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு