×

ஆஸி ஓபன் 4வது சுற்றில் இவாவை வீழ்த்திய இகா: காலிறுதியில் சின்னர், மேடிசன், எலினா

மெல்போர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று எலினா ஸ்விடோலினா, மேடிசன் கீஸ், இகா ஸ்வியடெக், ஜேனிக் சின்னர், லாரன்சோ சொனகோ உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் வென்று காலிறுதிக்குள் நுழைந்தனர். இந்தாண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டிகள் கடந்த 12ம் தேதி முதல் நடந்து வருகின்றன. 9ம் நாளான நேற்று நடந்த 4ம் சுற்று மகளிர் ஒற்றையர் போட்டி ஒன்றில் ரஷ்யாவின் வெரோனிகா குதெர்மேடோவா (27வயது, 75வது ரேங்க்), உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா (30 வயது, 27வது ரேங்க்) மோதினர்.

விறுவிறுப்பாக விளையாடிய ஸ்விடோலினா ஒரு மணி 23 நிமிடங்களில் 6-4, 6-1 என நேர் செட்களில் வெரோனிகாவை வீழ்த்தி 3வது முறையாக ஆஸி ஓபன் காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனை எலனா ரைபாகினா (25வயது, 7வது ரேங்க்), அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் (29வயது, 14வது ரேங்க்) களம் கண்டனர். ஒரு மணி 50 நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தின் முடிவில் மேடிசன் 6-3, 1-6, 6-3 என்ற செட்களில் போராடி வெற்றி பெற்றார். அதன் மூலம் 4வது முறையாக ஆஸி ஓபன் காலிறுதியில் விளையாட உள்ளார்.

மற்றொரு 4வது சுற்று போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை, போலந்தின் இகா ஸ்வியடெக் (23 வயது, 2வது ரேங்க்), ஜெர்மனி வீராங்கனை இவா லீஸ் (23 வயது, 128வது ரேங்க்) சந்தித்தனர். ஸ்வியடெக் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் 59 நிமிடங்களிலேயே 6-0, 6-1 என நேர் செட்களில் இவாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். ஸ்வியடெக் 2019ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஆஸி ஓபனில் விளையாடினாலும் 2வது முறையாக தற்போது காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் இத்தாலி வீரர் ஜேனிக் சின்னர் (23வயது, 1வது ரேங்க்), டென்மார்க் வீரர் ஹோல்கர் ருனே (21வயது, 13வது ரேங்க்) மோதினர். 3 மணி 13 நிமிடங்கள் நீண்ட இப்போட்டியில் 6-3, 3-6, 6-3, 6-2 என்ற செட்களில் சின்னர் வெற்றி பெற்று தொடர்ந்து 2வது முறையாக காலிறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு போட்டியில் இத்தாலி வீரர் லாரன்சோ சொனகோ (29வயது, 55வது ரேங்க்) 2 மணி 25 நிமிடங்கள் விளையாடி 6-3, 6-2, 3-6, 6-1 என்ற செட்களில் அமெரிக்க வீரர் லேர்னர் டையனை வென்றார். அதன் மூலம் கிராண்ட் ஸ்லாம் போட்டி ஒன்றில் முதல் முறையாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

The post ஆஸி ஓபன் 4வது சுற்றில் இவாவை வீழ்த்திய இகா: காலிறுதியில் சின்னர், மேடிசன், எலினா appeared first on Dinakaran.

Tags : Iga ,Eva ,Aussie Open ,Sinner ,Madison ,Elena ,Melbourne ,Elena Svitolina ,Madison Keys ,Iga Swietech ,Janick Sinner ,Lorenzo Sonako ,Australian Open ,Grand Slam ,Elina ,Dinakaran ,
× RELATED சில்லிபாயிண்ட்…