×

சென்னையில் திமுக சட்டத்துறை சார்பில் மாபெரும் மாநாடு; ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் உற்சாகமாக பங்கேற்பு: இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார்

சென்னை: வக்கீல் படையை தோற்கடித்து எங்கள் மீது யாராலும் கை வைக்க முடியாது என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் சவால் விட்டார். திமுக சட்டத் துறையின் 3-வது மாநில மாநாடு சென்னை கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இன்று காலை நடைபெற்றது. மாநாடு வளாகத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் என்விஎன்.சோமு பெயரில் அமைக்கப்பட்டிருந்த கொடி மேடையில் இருந்த 50 அடி உயர கொடி கம்பத்தில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கொடியை ஏற்றி வைத்தார்.

காலை 8.50 மணி அளவில், திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் திமுக சட்டத் துறையின் 3-வது மாநில மாநாட்டை தொடங்கி வைத்தார். சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சேகர்பாபு முன்னிலை வகித்தார். இதை தொடர்ந்து, தந்தை பெரியார் படத்தை சட்டத்துறைத் தலைவர் இரா.விடுதலை, பேரறிஞர் அண்ணா திருவுருவப்படத்தை என்.ஆர்.இளங்கோ, கலைஞர் படத்தை சட்டத்துறை இணை செயலாளர் கே.எம் தண்டபாணி, டாக்டர் அம்பேத்கர் படத்தை சட்டத்துறை இணைச் செயலாளர் பி.ஆர்.அருள்மொழி, பேராசிரியர் படத்தை சட்டத் துறை இணைச் செயலாளர் என்.மணிராஜ் ஆகியோர் திறந்து வைத்தனர். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடக்க உரையாற்றி பேசுகையில், திமுக சட்டத் துறையின் முதலாவது மாநில மாநாடு மதுரையில் நடந்தது. 2வது மாநாடு 2020ம் ஆண்டு சென்னையில் நடந்தது. இரண்டு மாநாட்டை மிஞ்சுகின்ற வகையில் இதே ஜனவரி மாதத்தில் 3வது மாநாடு நடைபெறுகிறது. திமுக சட்டத்துறை மாநாடு நடத்தினால் அடுத்து நடக்கக் கூடிய தேர்தல்களில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

அது கடந்த கால வரலாறு, அதேபோன்று, வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெறுவது உறுதி’’ என்று பேசினார்.

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசியதாவது:
இந்த மாநாடு இவ்வளவு பெரியதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை, கொஞ்சம் பேர் இருப்பார்கள், அதில் கருத்துக்கள் வரும் என்று நினைத்திருந்தேன். ஒரு கட்சிக்குரிய, மாநாட்டுக்குரிய கம்பீரம் இந்த மாநாட்டிற்கு உள்ளது. திமுகவுக்கு வருவதை சட்ட ரீதியாக தடுத்து நிறுத்த இவ்வளவு பேர் உள்ளார்கள். இந்தப் படையை தோற்கடித்து எவராலும் எங்கள் மீது கை வைக்க முடியாது.

ஒரு காலத்தில் ஓரிருவர் தான் வழக்கறிஞர்கள். திமுகவிற்கு ஒரே ஒரு வக்கீல் தான். அவர் தான் கோகுல கிருஷ்ணன், கோவை முதல் கும்மிடிப்பூண்டி வரை எந்த வழக்கு வந்தாலும் கோகுல கிருஷ்ணன் தான் பார்ப்பார். அவர் நீதிபதியாக ஆன பிறகு தான் சண்முகசுந்தரம் வந்தார். ஜெயலலிதா ஆட்சியில் சண்முகசுந்தரத்தை 21 முறை வெட்டினார்கள், அவ்வளவு பெரிய தியாகத்தை செய்தவர் சண்முகசுந்தரம். இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில், திமுக தலைமை கழக சட்ட ஆலோசகர் வில்சன் எம்பி, சட்ட திருத்த குழு தலைவர் கிரிராஜன் எம்பி, எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன், சட்டத்துறை இணை செயலாளர் ரவிச்சந்திரன், மாநில துணை செயலாளர் சந்துரு, சென்னை கிழக்கு மாவட்ட அமைப்பாளர் துரை கண்ணன், தலைமை கழக வழக்கறிஞர் சரவணன், நிர்வாகிகள் ரவிவர்மன், என்.ஆர்.கவுசிக் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநாட்டில் உரையாற்றுகிறார்.

The post சென்னையில் திமுக சட்டத்துறை சார்பில் மாபெரும் மாநாடு; ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் உற்சாகமாக பங்கேற்பு: இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார் appeared first on Dinakaran.

Tags : DIMUKA LAW DEPARTMENT ,CHENNAI ,M.D. K. Stalin ,DIMUKA GENERAL SECRETARY ,DURAIMURUGAN ,ADVOCATE FORCE ,3rd State Conference of the Department of Law of Dimuka ,Chaiappan College ,post ,Giant Conference ,PTI ,K. Stalin ,Dinakaran ,
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...