- தாமரைப்பாக்கம் சந்திப்பு
- Uthukkottai
- பெரியபாளையம்
- எல்லபுரம் யூனியன்
- பாகலமேடு
- Punnapakkam
- செம்பேடு
- கக்கர்
ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே, தாமரைப்பாக்கம் கூட்டுசாலை, உயர்கோபுர மின்விளக்குகளின்றி இருள் சூழ்ந்து காணப்படுவதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். பெரியபாளையம் அருகே, எல்லாபுரம் ஒன்றியம், தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையைச் சுற்றி பாகல்மேடு, புன்னப்பாக்கம், செம்பேடு, காரணி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள விவசாயிகள், வியாபாரிகள், மாணவ-மாணவிகள் பைக், பஸ், வேன் ஆகிய வாகனங்களில் தாமரைப்பாக்கம் கூட்டுசாலைக்கு வந்து அங்கிருந்து திருவள்ளூர், ஆவடி, செங்குன்றம், பெரியபாளையம் ஆகிய பகுதிகளுக்குச் செல்வார்கள். வேலை நிமித்தமாக வெளியூர்களுக்குச் சென்றுவிட்டு மீண்டும் தாமரைப்பாக்கத்திற்கு வந்து வீடு திரும்புபவர்கள் தாமரைப்பாக்கம் கூட்டுசாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கும்போது, அப்பகுதியில் மின்விளக்குகள் இல்லாததால் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால், சில மர்ம நபர்கள் பயணிகளிடம் செயின் பறிப்பு, திருட்டு போன்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
மேலும், அங்குள்ள கடைகளிலும் திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதை தவிர்க்க தாமரைப்பாக்கம் கூட்டுசாலையில் உள்ள நான்கு முனை சந்திப்பின் மையப்பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அப்போதைய எம்.பி.(திமுக) ஆ.கிருஷ்ணசாமியிடம் கோரிக்கை வைத்தனர். அதன்படி, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் ஒதுக்கப்பட்டு 8 விளக்குகள் கொண்ட உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த உயர் கோபுர மின்விளக்கு கடந்த 2 மாதங்களாக எரியவில்லை, மேலும் இதேபோல் இதன் அருகில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு மற்றொரு மின் விளக்கு போடப்பட்டது. அந்த உயர்கோபுர மின் விளக்கும் கடந்த 2 மாதங்களாக எரியவில்லை. இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உயர் கோபுர மின் விளக்குகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post தாமரைப்பாக்கம் கூட்டுசாலையில் பழுதான உயர் கோபுர மின்விளக்கு; இருளில் மூழ்கிய பஸ் நிறுத்தம்: பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.
