×

பிரதிகா, மந்தனா மாயாஜாலத்தால் அமர்க்கள வெற்றி! ரன் வெள்ளத்தில் மூழ்கிய அயர்லாந்து

ராஜ்கோட்: அயர்லாந்து மகளிர் அணியுடனான 3வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 304 ரன் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள அயர்லாந்து மகளிர் அணியுடன் 3 ஒரு நாள் போட்டியில் இந்திய மகளிர் அணி ஆடி வருகிறது. ஏற்கனவே முடிந்த 2 போட்டிகளில் அமர்க்கள வெற்றிகளை பெற்று தொடரை கைப்பற்றியுள்ள இந்திய அணி ராஜ்கோட்டில் நேற்று சம்பிரதாயமாக நடந்த 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் மோதியது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீராங்கனைகளாக களமிறங்கிய பிரதிகா ராவல், கேப்டன் ஸ்மிருதி மந்தனா, அயர்லாந்து வீராங்கனைகள் வீசிய பந்துகளை துவம்சம் செய்து ரன்களை குவித்தனர். அமர்க்களமாக ஆடிய அவர்கள் முதல் விக்கெட்டுக்கு 233 ரன் குவித்தனர். மந்தனா 80 பந்துகளில் 135, பிரதிகா 129 பந்துகளில் 154 ரன் குவித்தனர். இந்திய வீராங்கனைகளின் அற்புத பேட்டிங் வரிசையால் 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 435 ரன்கள் குவிந்தன.
இதையடுத்து, 436 ரன் எடுத்தால் வெற்றி என்ற பிரம்மாண்ட இலக்குடன் அயர்லாந்து களமிறங்கியது. துவக்க வீராங்கனை சாரா போர்ப்ஸ் 41, ஒர்லா பிரெண்டர்காஸ் 36 ஆகியோர் மட்டுமே இந்திய பந்து வீச்சை சற்று தாக்குப்பிடித்தனர். மற்றவர்கள் மோசமாக ஆடியதால், 31.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன் மட்டுமே அயர்லாந்து எடுத்தது. இதனால், 304 ரன் வித்தியாசத்தில் இந்தியா பிரம்மாண்ட வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது. இந்தியாவின் தீப்தி சர்மா 3, தனுஜா கன்வர் 2 விக்கெட் வீழ்த்தினர்.

* ஆண்கள் சாதனையை தகர்த்த இந்திய மகளிர்
அயர்லாந்துடன் இந்திய மகளிர் அணி நேற்று குவித்த 435 ரன், ஒரு நாள் போட்டிகளில் இந்திய மகளிர் மற்றும் ஆண்கள் அணிகள் இதுவரை குவித்த அதிகபட்ச ரன் சாதனைகளை தகர்த்தெறிந்துள்ளது. அயர்லாந்து மகளிர் அணியுடன் சமீபத்தில் முடிந்த 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய மகளிர் அணி அதிகபட்சமாக 5 விக்கெட் இழப்புக்கு 370 ரன் குவித்து சாதனை படைத்திருந்தது. அந்த சாதனை தற்போது தவிடுபொடியாகி உள்ளது. அத்துடன் நில்லாமல், இந்திய ஆண்கள் அணி, 2011ல் இந்துாரில் நடந்த ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக குவித்த, 5 விக்கெட் இழப்புக்கு 418 ரன் என்ற அதிகபட்ச சாதனையையும் முறியடித்துள்ளது. மந்தனாவும், பிரதிகா ராவலும், முதல் விக்கெட்டுக்கு 233 ரன் குவித்தது இந்திய பெண்கள் கிரிக்கெட்டில் புதிய சாதனை மைல் கல்லாக உருவெடுத்துள்ளது.

* புயல்வேக சதமடிப்பதில் மந்தனா நம்பர் 1
அயர்லாந்து மகளிர் அணியுடனான 3வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா, இந்திய வீராங்கனைகளில் புயல் வேக சதம் அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அயர்லாந்து அணிக்கெதிரான போட்டியில் அற்புதமாக ஆடி பந்துகளை சிதறடித்த மந்தனா, 70 பந்துகளில் 100 அடித்து புதிய சாதனை படைத்தார். இதற்கு முன், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ஹர்மன்பிரீத் கவுர் 87 பந்துகளில் சதமடித்ததே இதுவரை இந்திய வீராங்கனைகளில் அதிவேக சதமாக இருந்து வந்தது. அந்த சாதனையை தற்போது மந்தனா உடைத்தெறிந்துள்ளார். தொடர்ந்து ஆடிய அவர் 80 பந்துகளில் 135 எடுத்து அவுட்டானார். அதில் 7 சிக்சர்கள், 12 பவுண்டரிகள் அடங்கும். இது, மந்தனா விளாசிய 10வது சதம். மகளிரில் அதிக சதங்கள் விளாசிய வீராங்கனையாக 15 சதங்களுடன் ஆஸ்திரேலியாவின் மெக் லேன்னிங் முதலிடத்தில் உள்ளார். நியூசிலாந்தின் சுஸி பேட்ஸ் 13 சதங்களுடன் 2ம் இடத்தில் உள்ளார். 3ம் இடத்தில் உள்ள இங்கிலாந்தின் டேம்மி பியுமோன்டின் 10 சதங்களை மந்தனா தற்போது எட்டியுள்ளார்.

சிங்கப்பெண்ணால் தகரும் சாதனைகள்
இந்திய வீராங்கனைகளின் அதிவேக சதங்கள்
பந்து வீராங்கனை எதிரணி இடம், ஆண்டு
70 ஸ்மிருதி மந்தனா அயர்லாந்து ராஜ்கோட், 2025
87 ஹர்மன்பிரீத் கவுர் தென்ஆப்ரிக்கா பெங்களூரு, 2024
90 ஹர்மன்பிரீத் கவுர் ஆஸ்திரேலியா டெர்பி, 2017
90 ஜெமிமா ரோட்ரிகஸ் அயர்லாந்து ராஜ்கோட், 2025
98 ஹர்லீன் தியோல் வெ.இண்டீஸ் வதோதரா, 2024

The post பிரதிகா, மந்தனா மாயாஜாலத்தால் அமர்க்கள வெற்றி! ரன் வெள்ளத்தில் மூழ்கிய அயர்லாந்து appeared first on Dinakaran.

Tags : Prathika ,Mandhana ,Ireland ,Rajkot ,India ,Ireland Women's Team ,Indian Women's Team ,Ireland Women's Team… ,Dinakaran ,
× RELATED 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸி.ஓபனில் அதிரடி காட்ட தயாராகும் வீனஸ்