ஈரோடு, ஜன. 10: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணும் மையமான சித்தோடு அடுத்த ஐஆர்டிடியில், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணிக்கை வரும் பிப்ரவரி 8ம் தேதி நடைபெறவுள்ளது. அதன்படி, சித்தோடு அடுத்த ஐஆர்டிடி கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக, மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகளை காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதை அவர் பார்வையிட்டார். தொடர்ந்து, வாக்குப்பதிவு முடிவுற்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் பாதுகாத்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளன்று மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது, மாவட்ட எஸ்.பி ஜவஹர், தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான மனிஷ், தேர்தல் வட்டாட்சியர் சிவசங்கர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.