மதுரை, ஜன.8: அரிவாள், கத்தி போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் பட்டறை தொழிலாளர்களை, போலீசார் தொந்தரவு செய்வதாக தொடரப்பட்ட வழக்கில் தென்காசி எஸ்பி பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. தென்காசியைச் சேர்ந்த சப்பானி (எ) சேகர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: தென்காசி வடகரை நகராட்சி பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பட்டறை வைத்து அரிவாள், கத்தி போன்ற பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர். இந்நிலையில் தென்காசி எஸ்பி இத்தகைய பொருட்களை உற்பத்தி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வாய்மொழி உத்தரவிட்டுள்ளார். உற்பத்தி செய்யப்படும் இரும்பு பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். தென்காசி மாவட்ட காவல்துறையினர் அதிக கட்டுப்பாடுகளை விதித்து துன்புறுத்தி வருகின்றனர். அரிவாள், கத்தி போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் பட்டறை தொழிலாளர்களை காவல்துறையினர் தொந்தரவு செய்வதில் தடுக்க வேண்டும். எனவே அரிவாள், கத்தி போன்றவற்றை விற்பனை செய்யும்போது அதில் போலீசார் தலையிடக் கூடாது என்று உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரியா கிளெட் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், மனுவிற்கு தென்காசி எஸ்பி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
The post பட்டறை தொழிலாளர்களை தொந்தரவு செய்வதாக வழக்கு appeared first on Dinakaran.