- வீரமங்கை வேலு நாச்சியார்
- மோடி
- புது தில்லி
- ராணி வேலுநாச்சியார்
- நரேந்திர மோடி
- வீரமங்கை ராணி வேலு நாச்சியார்
- சிவகங்கை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இராமநாதபுரம்...
புதுடெல்லி: ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் புகழஞ்சலி செலுத்தி உள்ளார். தமிழகத்தின் சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த 18-ம் நூற்றாண்டு வீரமங்கை ராணி வேலு நாச்சியார் பிறந்த தினம் இன்று (ஜனவரி 3). ராமநாதபுரம் அடுத்த சக்கந்தி என்ற ஊரில் (1730) பிறந்தார். சேதுபதி ராஜாவின் ஒரே மகளான வேலு நாச்சியார் போர்க்கலைகள், குதிரையேற்றம் போன்றவற்றையும் அறிந்தவர். பிரெஞ்சு, உருது என பல மொழிகளையும் கற்றவர். காளையார் கோவில் போரில், அவரது கணவர் முத்து வடுகநாத தேவரை, ஆற்காடு நவாப்பின் மகன் தலைமையிலான ஆங்கிலேயர் படை கொன்றது.
அதன்பின் திண்டுக்கல்லில் 8 ஆண்டுகள் வசித்த வேலு நாச்சியார், அங்கு ஆட்சி செய்த கோபால் நாயக்கர், மைசூர் சுல்தான் ஹைதர் அலி ஆகியோரின் ஆதரவுடன், தனது சாம்ராஜ்ஜியத்தை கடந்த 1780-ம் ஆண்டு மீட்டார்.ஆங்கிலேயர்களையும், ஆற்காடு நவாப்பையும், போரில் வீழத்தி வீர மங்கை என்ற பட்டத்தை ராணி வேலு நாச்சியார் பெற்றார். ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சிக்கு வித்திட்ட வீராங்கனை வேலு நாச்சியார் உடல்நலக் குறைவால் 66-வது வயதில் (1796) மறைந்தார். இவரது வீர தீர செயலை போற்றும் வகையில் மத்திய அரசு கடந்த 2008-ம் ஆண்டு நினைவு தபால் தலையும் வெளியிட்டது.
இந்த நிலையில், ராணி வேலு நாச்சியாரின் பிறந்த நாளான இன்று, பிரதமர் புகழஞ்சலி செலுத்தினார். ட்விட்டர் பதிவில் அவர் விடுத்துள்ள செய்தியில்,” துணிச்சல் மிக்க வேலு நாச்சியாரை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்வோம். ஆங்கிலேயர்களின் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக வீர போராட்டத்தை நடத்தினார் வேலு நாச்சியார்; ஒப்பீடு செய்ய இயலாத வீரம், புத்திசாலித்தனம் ஆகியவை அவரின் ஆயுதமாக இருந்தது. ஒடுக்குமுறைக்கு எதிராக நிற்கவும், சுதந்திரத்திற்காகப் போராடவும் எதிர்கால தலைமுறையை ஊக்குவித்த தலைவர்களில் முக்கியமானவர். பெண்களை மேம்படுத்துவதில் வேலு நாச்சியாரின் பங்களிப்பு போற்றத்தக்கது,”இவ்வாறு தெரிவித்தார்.
The post பெண்களை மேம்படுத்துவதில் வீரமங்கை வேலு நாச்சியாரின் பங்களிப்பு போற்றத்தக்கது : பிரதமர் மோடி புகழாரம் appeared first on Dinakaran.