×

எலும்பு… அ முதல் ஃ வரை!

நன்றி குங்குமம் தோழி

நம்மைச் சுற்றி நிகழும் சண்டைகளை கவனித்தால் பெரும்பாலும் சண்டையிடுபவர் பேசும் வசனம் ‘அவன் எலும்பை அடிச்சு நொறுக்கணும்’, ‘நெஞ்சு எலும்பை மிதிச்சிடுவேன்’, ‘பல்ல ஒடச்சி கையில கொடுப்பேன்’ என எலும்பினையும், பல்லையும்தான் நம் உடம்பில் முதன்மையாகக் கொண்டு பேசுவர். ஏனென்றால், உடம்பில் மிகக் கடினமான உறுப்பு பல்தான். இரண்டாவது எலும்புகள். இதனால்தான் அவ்வாறு சொல்வார்கள்.இப்படி நம் மனித உடம்பின் இரண்டாம் கடினமான உறுப்பான எலும்பினைப் பற்றியும், அதன் பயன்கள், அதில் இயன்முறை மருத்துவத்தின் பங்கு என்ன என அனைத்தையும் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

எலும்புகள்…

திடமான தோற்றம் கொண்ட எலும்புகள்தான் நம் உருவத்தை, உடலை வடிவமைக்கிறது. வெறும் எலும்புக்கூட்டை மட்டும் வைத்து எந்த உயிரினம் என நம்மால் எளிதில் கண்டுகொள்ள முடியும். நம்மால் நடக்க முடிவதற்குக் காரணமும் எலும்புக்கூட்டின் வடிவமைப்பால்தான்.வெளியே வெறும் தடிமனாகவும், ஆங்காங்கே சிறு பள்ளமும் குழியும் இருக்கும் எலும்புகளின் உள்ளே பல அடுக்குகள் உள்ளன. நம் உடம்பின் அனைத்து இடங்களிலும் (நம் முன்னங்கழுத்து
உட்பட) எலும்புகள் உள்ளன.

எலும்புகளின் வேலை…

*நமக்கு ஓர் உருவத்தைக் கொடுப்பது எலும்புகள்தான். முக அமைப்பு, இடுப்புக் கூடு என வடிவத்தைத் தருவதும் அதுவே. ஒவ்வொரு மனிதரின் எலும்புக் கூட்டிலும் அவரவர் வயதிற்கு ஏற்ப நிறைய வித்தியாசங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.

*திடமான எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்து மூட்டுகளாகிறது.

இந்த மூட்டுகளின் அசைவுகளால்தான் நடப்பது, உட்காருவது எல்லாம் சாத்தியமாகிறது.

*நம் மூளை, இதயம், வயிற்று உறுப்புகள் என அனைத்தையும் கவசமாய் பாதுகாப்பது எலும்புகள்தான்.

*வெள்ளை அணு, சிவப்பு அணு மற்றும் தட்டணுக்கள் போன்ற ரத்த அணுக்களை எலும்புகள் உற்பத்தி செய்கின்றன.

*எலும்புகள் சுண்ணாம்புச்சத்து போன்ற தாதுக்களை தனக்குள் சேமித்து வைத்துக்கொள்ளும் கிடங்கு போலவும் வேலை செய்யும்.

மற்ற உறுப்புகளின் பங்கு…

*எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்து மூட்டுகளாய் செயல்படுகிறது. இந்த மூட்டுகள் மேலும் உறுதியாய் இரு எலும்புகளையும் வைத்திருக்க ஜவ்வுகள் (Ligaments) உதவுகிறது.

*எலும்புகள் மூட்டுகளாக இணையும் இடத்தில் தொடர்ந்து உராய்தல் (அதாவது, இரு எலும்பு முனைகளும் நாம் அசைவினை ஏற்படுத்தும்போது உராயும்) ஏற்படும். அப்படி வருடக்கணக்கில் நிகழ்ந்தால் எலும்புத் தேய்மானம் ஏற்படும். இதனைத் தடுக்க எலும்பு முனையை சுற்றி வழவழப்பான எலும்பு மஜ்ஜை (Cartilage) அமைந்திருக்கும்.

*எலும்புகளின் இருமுனையிலும் சிறு பள்ளங்கள் இருக்கும். இதில் தசைகள் (Muscles) ஒட்டியிருக்கும். தசைகளுக்கும் மூட்டுக்கும் மூளையிலிருந்து சமிக்ஜை கிடைத்தவுடன் அசைவினை தசைகள் உண்டாக்கும். இதனால் நம்மால் நடக்க, ஓட என எல்லாம் செய்ய முடிகிறது.

நோய்கள்…

பெரும்பாலான மக்களுக்கு பொதுவாக எலும்புகளில் வரக்கூடிய பிரச்னைகள்…

* பலவீனமான எலும்புகள்.

* எலும்பு அடர்த்திக் குறைவதனால் ஏற்படும் எலும்பு முறிவு.

* மூட்டு வலி.

* எலும்பு முனைகளில் இருக்கும் மஜ்ஜை வறண்டு போவதால் ஏற்படும் எலும்புத் தேய்மானம்.

* எலும்புப் புற்றுநோய், தொற்றுநோய் என சில நோய்கள் வெகு சிலரை மட்டுமே பாதிக்கும்.

ஆபத்துக்காரணிகள்…

இன்று எலும்புகளில் ஏற்படும் பொதுவானப் பிரச்னைகளில் எலும்பு முறிவு சகஜமான ஒன்றாகிவிட்டது. யாரெல்லாம் சிவப்புக் கொடியின் கீழ் நிற்கிறோம் எனப் பார்ப்போம்.

*நீண்ட வருடங்களாக வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள்.

*தினசரி போதுமான நீர் அருந்தாதவர்கள்.

*பல ஆண்டுகளாக சுண்ணாம்புச் சத்து குறைபாட்டுடன் இருப்பவர்கள்.

*கர்ப்பிணிகள், குழந்தை பிறந்த தாய்மார்களில் போதுமான ஊட்டச்சத்து எடுத்துக்கொள்ளாதவர்கள்.

*போதுமான சுண்ணாம்புச் சத்து மற்றும் வைட்டமின் டி சத்துகள் ஆரம்பம் முதலே குறைவாகக் கிடைக்கும் பள்ளிக் குழந்தைகள்.

*உடம்பில் வெயில் துளியும் படாமல் வாழும் சூழலில் உள்ளவர்கள். அதாவது, பெரியவர்கள், உடல் நலம் சரி இல்லாதவர்கள் என வீட்டிலேயே அடைந்திருப்பவர்கள்.

*மேலும், சில கலாச்சாரத்தில் பெண்கள் வெளியே செல்லும்போது தலை, முகம் உட்பட முழுவதும் ஆடையினால் போர்த்தியிருக்க வேண்டும் என வெயில் படாமல் இருப்பவர்கள்.

*கர்ப்பப்பையினை ஐம்பது வயதிற்குள் அகற்றிவிட்ட பெண்களுக்கு எலும்புப் புரை ஏற்படும். அதனால், எளிதில் எலும்பு முறிவு நிகழலாம்.

*அதீத எலும்புப் புரையுடன் (எலும்பின் அடர்த்தி குறைவது) நீண்ட ஆண்டுகள் இருப்பது.

விளைவுகள்…

ஆரோக்கியமான எலும்புகளுடன் இருப்பது இன்று அனைவருக்கும் எட்டாதக் கனியாக மாறிவருகிறது. இதனால் நம்மில் பலர் இதன் விளைவுகளில் சிக்கித் தவிக்கிறோம்.

*சிறிய விபத்துகளுக்கெல்லாம் எளிதாக எலும்பு முறிவுகள் ஏற்படுவது.

*தினசரி உடல் வலி வருவது.

*இளம் வயதிலேயே எலும்புத் தேய்மானம் உண்டாவது.

*கால் முட்டி, கழுத்து, முதுகு என மூட்டு வலிகள் மூன்று மாதத்திற்கு மேல் நீடிப்பது.

*உடல் சோர்வுடன் காணப்படுவது.

கண்டறிவது…

*எலும்புகளின் அடர்த்தியை கண்டறிய ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) போன்ற பரிசோதனைகள் உள்ளன. முப்பது வயதிற்கு மேல் உள்ளவர்கள் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்ளலாம்.

*எலும்புத் தேய்மானம் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய சாதாரண எக்ஸ்ரே பரிசோதனை போதுமானது. வலி இருக்கும் மூட்டிற்கும் வயதிற்கும் ஏற்ப மருத்துவர் ஆலோசனையின் பின் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

*எலும்பின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான வைட்டமின் டி, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் சத்து என அனைத்தும் சரியான அளவில் உள்ளதா என ரத்தப் பரிசோதனை மூலம் தெரிந்துகொள்ளலாம்.

இயன்முறை மருத்துவம்…

ஆரோக்கியமான எலும்புகள் எப்போதும் இருக்க உடற்பயிற்சிகள் அவசியம். ஒவ்வொரு நபருக்கும் ஏற்றார் போல உடற்பயிற்சிகள் மாறுபடும் என்பதால், அருகில் உள்ள இயன்முறை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சரியான பயிற்சிகளை சரியான முறையில் செய்ய வேண்டும்.ஆன்லைன் மற்றும் உடற்பயிற்சிக் கூடத்திலும் கற்றுக்கொள்ளலாம். ஒருமுறை கற்றுக்கொண்ட பின் வீட்டில் தொடர்ந்து செய்து வரலாம்.

உடற்பயிற்சி வகைகள்…

1. தசை வலிமை பயிற்சிகள் தசைகளை வலிமையாய் வைத்திருக்க செய்ய வேண்டிய பயிற்சி. இதனால் எலும்புகள் பாதுகாக்கப்படும். மூட்டுகளுக்கு எதிர்காலத்தில் சேதம் வராமல் தடுக்க முடியும்.

2. இதய நுரையீரல் தாங்கும் திறன் பயிற்சிகள் நடைப்பயிற்சி, நடனம், ஸும்பா, நீச்சல் பயிற்சி என எது பிடித்திருக்கிறதோ அதனை தேர்வு செய்து கொள்ளலாம். தொடர்ந்து செய்து வருவதன் மூலம் எலும்புகள் பலம் பெறும்.

உடற் பயிற்சியின் பலன்கள்…

*எலும்புகளுக்கு வலிமை சேர்க்கும்.

*எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கும்.

*வயதான பின் தோன்றும் இயல்பான ‘எலும்பு அடர்த்திக் குறைதலை’ தடுக்கும்.

*தசைகளை போதுமான அளவில் வலிமையுடன் உடற்பயிற்சி செய்து தயாராக வைத்திருப்பதனால் நாம் சுமை தூக்கும் போது, அதிக நேரம் வேலை செய்யும் போது என அனைத்து அசைவு
களிலும் வரும் அழுத்தம், விசை யாவும் நேரடியாக எலும்புகளுக்குப் போகாமல் தசைகள் தாங்கிக்கொள்ளும். இதனால் பிற்
காலத்தில் எலும்புத் தேய்மானம், ஜவ்வு பிதுங்குதல், மூட்டு வலி வருவது என அனைத்தையும் தடுக்கலாம்.

தெரிந்துகொள்வோம்…

* மனித உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன.

*பிறந்த பின்பும் எலும்புகள் முழுதாய் வளர்ந்திருக்காது. எலும்புகள் முழுமையாய் கூடி முழு அடர்த்தி பெறுவதற்கு பத்து முதல் பதினைந்து வயது வரை ஆகும் என்பதால், பிறந்த குழந்தைகளுக்கு 275 முதல் 300 எலும்புகள் இருக்கும்.

*ஆண்கள் இடுப்புக்கூட்டை விட பெண்கள் இடுப்புக்கூடு இயல்பிலேயே விரிந்திருக்கும். அதேபோல ஆண்களுக்கு தோள்பட்டைக் கூடு விரிந்திருக்கும்.

*இறந்து போனவரின் இடுப்பு எலும்புக்கூட்டை வைத்து ஒரு பெண்ணிற்கு சுகப்பிரசவம் நிகழ்ந்துள்ளதா இதற்கு முன் என தெரிந்துகொள்ள முடியும்.

* மொத்த எலும்புகளில் பாதிக்குப் பாதி நம் கை, கால்களில் உள்ளவையே.

*உடம்பில் உள்ள அனைத்து எலும்புகளும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கும். ஆனால், தொண்டைப் பகுதியில் உள்ள ஒரே ஒரு எலும்பு மட்டும் தசைகளுடனும், ஜவ்வுகளுடனும் இணைந்திருக்கும். அதாவது, அதற்கும் மற்ற எலும்புகளுக்கும் எந்தவித இணைப்பும் இருக்காது.

மொத்தத்தில் எலும்புகளின் முக்கியத்துவத்தை அறிந்து அதற்கேற்ப எலும்புகளை இயன்முறை மருத்துவம் துணை கொண்டு வரவிருக்கும் புதிய ஆண்டிலிருந்து பாதுகாக்கத் தொடங்குவோம்.

இயன்முறை மருத்துவர்: கோமதி இசைக்கர்

 

The post எலும்பு… அ முதல் ஃ வரை! appeared first on Dinakaran.

Tags :
× RELATED குளிர்கால சரும வறட்சியைப் போக்க!