மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் அவசர காலங்களில் பயன்படுத்தக்கூடிய தீயணைப்பான் கருவிகளில் காலாவதியான சிலிண்டர்கள் பொருத்தப்பட்டிருந்ததை விமான பயணி ஒருவர் போட்டோக்கள் எடுத்து, இணையதளம் மூலம் விமான நிலைய அதிகாரிகளுக்கு புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், காலாவதியான சிலிண்டர் 2024 டிசம்பர் 30ம் தேதி மாற்றப்பட்டு விட்டது என்று விமான நிலைய அதிகாரிகள் இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு விமான நிலையம் மற்றும் சர்வதேச விமான நிலையம் புறப்பாடு பகுதி, வருகை பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அவசர காலங்களில் உபயோகப்படுத்துவதற்காக அவசர கால தீயணைப்பான் கருவிகள், 10 மீட்டர் தூரத்திற்கு ஒரு இடத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இவைகள் மிகவும் அவசியமான, மிக முக்கியமான பாதுகாப்பு கருவிகள்.
5 கிலோ எடையிலான இந்த ஒவ்வொரு சிலிண்டர்களிலும் டிசிபி எனப்படும் ‘ட்ரை கெமிக்கல் பவுடர்’ மற்றும் தீயை அணைப்பதற்கான காஸ் நிரப்பப்பட்டு இருக்கும்.இந்த தீயணைப்பான் கருவிகளை சென்னை விமான நிலைய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், பிசிஏஎஸ் எனப்படும் பீரோ ஆப் சிவில் ஏவியேசன் செக்யூரிட்டி அதிகாரிகளும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த அவசரகால பாதுகாப்பு கருவியான தீயணைப்பான் சிலிண்டர்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு பிரிவில் இடம்பெற்றுள்ளன. இந்த சிலிண்டர்கள் அனைத்தும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி புதிய சிலிண்டர்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது பாதுகாப்பு விதிமுறைகளில் முக்கியமான ஒன்று.
சென்னை உள்நாட்டு விமான நிலையம் புறப்பாடு பகுதியில், இதுபோன்ற பாதுகாப்பு சிலிண்டர்கள் 2011ம் ஆண்டு பொருத்தப்பட்டுள்ளது. அதன் ஆயுள் காலம் 2021ம் ஆண்டில் காலாவதி ஆகிவிட்டது. எனவே அந்த சிலிண்டர்கள் மாற்றப்பட்டு புதிய சிலிண்டர்கள் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில், அந்த சிலிண்டர்கள் மாற்றப்பட்டு புதிய சிலிண்டர் பொருத்தப்படவில்லை. இதை கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து அந்தமான் செல்வதற்காக சென்ற பயணி ஒருவர், பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையடுத்து அவர் உடனடியாக அந்த அவசரகால பாதுகாப்பு சிலிண்டர்களை தனது செல்போன்களில் போட்டோக்கள் எடுத்து, எக்ஸ் இணையதளத்தில் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா சென்னை விமான நிலையம் அதிகாரிகளுக்கு தகவல்களாக போட்டு, விமான நிலைய பாதுகாப்பில் ஏன் அலட்சியம் காட்டுகிறீர்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா சென்னை விமான நிலைய அதிகாரிகள், அதே இணையதளத்தில் அளித்துள்ள பதிலில், 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி, நாங்கள் அந்த சிலிண்டர்களை மாற்றி புதிய சிலிண்டர்கள் அமைத்து விட்டோம். இப்போது சென்னை விமான நிலையத்தில் அனைத்து பாதுகாப்பு தீயணைப்பு சிலிண்டர்களும் தகுதியான நிலையில் உள்ளன. எனவே இப்போது விமான நிலையத்தில் அது சம்பந்தமாக எந்த பிரச்னையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஆனாலும், 2021ம் ஆண்டு மாற்ற வேண்டிய அவசரகால தீயணைப்பு பாதுகாப்பு சிலிண்டர்கள் 3 ஆண்டுகள் காலதாமதமாக 2024 டிசம்பர் 30ம் தேதி வரை மாற்றாமல் இருந்ததற்கான காரணம் என்ன என்ற கேள்விக்கு சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் இருந்து முறையாக எந்த பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் சென்னை விமான நிலையத்தின் பல்வேறு பகுதிகளில் இதேபோன்ற அவசர கால தீயணைப்பான் கருவிகளின் சிலிண்டர்கள் நூற்றுக்கணக்கான இடங்களில் உள்ளன. அவைகளிலும் இதுபோன்ற காலாவதியான சிலிண்டர்கள் ஏதாவது இருக்குமா என்ற அச்சம் பரவலாக ஏற்பட்டுள்ளது.
The post சென்னை விமான நிலையத்தில் அவசர கால தீயணைப்பான் கருவிகளில் காலாவதியான சிலிண்டர்கள் பொருத்தம்: போட்டோ எடுத்து இணையதளம் மூலம் விமான பயணி புகாரால் பரபரப்பு appeared first on Dinakaran.