பெரியபாளையம் அருகே ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர். 100 நாள் வேலை முடித்த பல்வேறு திட்டங்கள் பறிபோகும் அபாயம் இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த மல்லியங்குப்பம் ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் காய்கறி, மலர் போன்றவை பயிரிடப்பட்டு சிறு, குறு விவசாயிகள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.
நேற்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஊராட்சிகளை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுடன் இணைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டது. சோழவரம் பிடிஓ அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள மல்லியங்குப்பம் ஊராட்சியை அருகே அமைந்துள்ள ஆரணி பேரூராட்சியுடன் இணைக்க நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்லியன் குப்பம் கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது கிராம ஊராட்சியை பேரூராட்சி உடன் இணைப்பதால் 100 நாள் வேலை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் பறிபோகும் அபாயம் இருப்பதாக புகார் தெரிவித்தனர்.
100 நாள் வேலை திட்டத்தை மட்டுமே நம்பி கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருவதாகவும் திட்டம் பறிபோனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என புகார் தெரிவித்தனர். மேலும் சிறு குறு விவசாயிகள் அதிக அளவில் உள்ள நிலையில் நகரமயமாதலால் பாதிப்புகள் அதிகரிக்கும் என குற்றம் சாட்டினர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக புதுவாயல் – பெரியபாளையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
The post பெரியபாளையம் அருகே ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்! appeared first on Dinakaran.