மதுரை: இன்று ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், பல்வேறு காலங்களிலும் புழக்கத்தில் இருந்த ஆண்டு கணக்குகள் வியப்பில் விழி விரிய வைக்கின்றன. பொதுவாக ஆண்டுகள் என்றாலே அதை கி.மு (கிறிஸ்துவிற்கு முன்), கி.பி (கிறிஸ்துவிற்கு பின்) என அறிந்து வைத்திருப்போம். பழங்காலத்தில் பல்வேறு இடங்களிலும் பலவித தொடக்க ஆண்டுகளை மக்கள் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இன்று ஆங்கில புத்தாண்டு 2025 துவங்கும் நாளில், புழக்கத்தில் இருந்த பல்வேறு ஆண்டுகள் குறித்தும் அறிந்து கொள்வோம்.
* பரவலாக பலரும் கி.மு, கி.பி என கிறிஸ்துவ ஆண்டையே பயன்படுத்தி வருகின்றனர். முதன்முதலில் ஒலிம்பிக் நடந்த கி.மு 776ஐ கிரேக்கர்கள் தேர்ந்தெடுத்து, கி.மு 776லிருந்தும், ரோமானியர்கள் கிமு 753ல் இருந்தும் இதனை தொடங்குகின்றனர்.
* முகம்மது நபிகளார் மெக்காவை விட்டு மதீனா சென்ற பயணத்தை (கி.பி 622) ஹிஜிரா ஆண்டாக முஸ்லிம்கள் கணக்கிடுகின்றனர்.
* தமிழ் கல்வெட்டுகளில் காணப்படும் கலி ஆண்டு கி.மு 3101ம் ஆண்டிலிருந்து கணக்கிடப்படுகிறது. மதுரை அருகே ஆனைமலையில் உள்ள கல்வெட்டில் ‘கலி 3871’ என குறிப்பிடப்பட்டுள்ளதால் இக்கல்வெட்டு காலத்தை கி.பி 770 (3871 – 3101) எனக் கணக்கிடுகின்றனர்.
* சமண, பவுத்த மதங்களில் மகாவீரர், புத்தர் முக்தியடைந்த ஆண்டுகளை அடிப்படையாகக் கொண்டு காலம் கணக்கிடப்படுகிறது. அதாவது மகாவீரர் முக்தியடைந்த கி.மு 468 மற்றும் புத்தர் முக்தியடைந்த கி.மு 487 ஆகிய ஆண்டுகளில் இருந்து மகாவீரர், புத்தர் ஆண்டுகள் கணக்கில் கொள்ளப்படுகிறது.
* வட மாநில கல்வெட்டுகளில் விக்ரம ஆண்டு குறித்து காணலாம். கி.மு 57ல் இருந்து இவ்வாண்டு கணக்கிடப்படுகிறது. கிருத, மாளவ, சாம்ராட் என்ற பெயர்களிலும் இந்த ஆண்டு அழைக்கப்படுகிறது.
* தமிழ் கல்வெட்டுகளில் அதிகம் காணப்படுவது சக ஆண்டுதான். கி.பி 78ம் ஆண்டு சக ஆண்டுத் தொடக்கமாகும். இதே வரிசையில் கி.பி 319லிருந்து குப்த ஆண்டு கணக்கிடப்படுகிறது. இதேபோல் வல்லபி ஆண்டும் இவ்வருடத்திலிருந்தே கணக்கிடப்படுகிறது. இவை வட மாநிலக் கல்வெட்டுகளில் மட்டுமே காணப்படுகின்றன.
* கொல்லம் நகரம் தோன்றிய ஆண்டான கி.பி 824ல் இருந்து கொல்லம் ஆண்டு கணக்கிடப்படுகிறது. கல்யாணி எனும் நகரை தலைமையிடமாக கொண்டு ஆண்ட மேலை சாளுக்கிய மன்னர் ஆறாம் விக்கிரமாதித்தன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளில் சாளுக்கிய விக்கிரம ஆண்டு குறிப்பிடப்படுகிறது. இவ்வாண்டு கிபி 1075 – 76லிருந்து கணக்கிடப்படுகிறது.
* இடைக்கால பாண்டியர், பிற்காலச் சோழர், பிற்கால பாண்டியர் கல்வெட்டுகளில் ஆட்சி ஏறிய ஆண்டினை ‘யாண்டு’ என குறிப்பிடுகின்றனர். ஒரு மன்னன் ஒரு வருடத்தில் எந்த பட்சத்தில் எந்த நட்சத்திரத்தில் முடிசூட்டினாரோ, அடுத்த ஆண்டு அதே மாதம், அதேபட்சம், அதே நட்சத்திரத்தில் இரண்டாம் யாண்டு தொடக்கமாகும். கி.பி 14ம் நூற்றாண்டு வரை இம்முறை வழக்கில் இருந்திருக்கிறது.
இவை தவிர கங்க ஆண்டு (கி.பி 496), கலச்சூரி ஆண்டு (கி.பி 606-7), லட்சுமணசேனா ஆண்டு (கி.பி 1179) இப்படி பல ஆண்டுகள் இருந்திருக்கின்றன. இன்று கி.பி 2025 ஆங்கில ஆண்டில் காலடி வைக்கும் நிலையில், நம் மக்கள் பயன்பாட்டில் இத்தனை ‘ஆண்டுகள்’ இருந்தன என்பதே நமக்கெல்லாம் வியப்பளிக்கும் தகவலாகும்.
The post ஆங்கில புத்தாண்டு மட்டுமல்ல… இன்னும் இருக்குது ஏராளம்; அடடா இத்தனை ஆண்டுகளா?: புழக்கத்தில் உள்ள வியப்பூட்டும் கணக்குகள் appeared first on Dinakaran.