- மார்கசி மாதம்
- திருவிழா
- மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில்
- மேல்மலையனூர்
- அங்காளம்மன் கோயில்
- மேல்மலையனூர், விழுப்புரம்
மேல்மலையனூர், ஜன. 1: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மார்கழி மாத ஊஞ்சல் ஊற்சவம் நடந்தது. இதில் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீபம் ஏந்தி வழிபட்டனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயில் உள்ளது. இங்கு மார்கழி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் இரவு கோயில் வளாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை மூலவர் அங்காளம்மனுக்கு பால், இளநீர், தேன், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பூஜைகளால் அபிஷேகமும், பலவித வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர் தங்க கவசம் அணிவித்து தீபாராதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து உற்சவர் அங்காளம்மன் பலவித மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஜகத் ஜனனி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்பு நள்ளிரவில் மேள தாளங்கள் முழங்க வடக்கு வாசல் எதிரே உள்ள ஊஞ்சல் மண்டபத்திற்கு பூசாரிகள் அம்மனை தோளில் சுமந்து சென்று ஊஞ்சலில் அமர வைத்தனர். பின்னர் தாலாட்டு பாடல்களை பாடினர். அப்போது எதிரே கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கையில் தீபம் ஏந்தி பக்தி பரவசத்துடன் வணங்கி அம்மன் அருளை பெற்று சென்றனர்.
இவ்விழாவிற்கு தமிழக பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்ததால் பல்வேறு பகுதியிலிருந்து தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும் பக்தர்களின் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை கோயில் உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சுரேஷ், ஏழுமலை, பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம் மற்றும் மேலாளர் மணி, உள்துறை மணியம் குமார், காசாளர் சதீஷ் உள்ளிட்டகோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
The post மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மார்கழி மாத ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கையில் தீபம் ஏந்தி தரிசனம்: வெளிமாநில பக்தர்களும் திரண்டனர் appeared first on Dinakaran.