ராமநாதபுரம், ஜன.1:ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக நுழைவாயில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு பொதுமக்கள், அலுவலர்கள் மரியாதை செலுத்தியும், செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டியும் வருகின்றனர். கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு கலைஞர் சிலை திறந்து வைத்து 25 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனை தமிழ்நாடு அரசு வெள்ளி விழாவாக கொண்டாடி வருகிறது.
இதனை மாவட்டத்தில் கொண்டாடும் வகையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் பிரதான வாசல் நுழைவாயில் பகுதியில் கீழ் தளத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு துறையின் சுதந்திரப் போராட்ட தியாகிகள் புகைப்பட கண்காட்சி பகுதியில் பீடத்துடன் கூடிய 10 அடி உயர திருவள்ளுவர் செராமிக் சிலை வைக்கப்பட்டுள்ளது. அச்சிலைக்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து ஒருங்கிணைந்த கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அனைத்து துறை பிரிவு, அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்கள், அரசு உதவிகள் மற்றும் அலுவல் சார்ந்த உதவிகளை பெறுதல், மனு அளித்தல் போன்றவற்றிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரும் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், திருவள்ளுவர் சிலையை தொட்டு வணங்கியும், செல்ஃபி, குரூப் போட்டோ எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.
The post கலெக்டர் அலுவலகத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மக்கள் மரியாதை appeared first on Dinakaran.