- ராஜகோபுரம்
- கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்
- அமைச்சர்
- சேகர்பாபு
- கன்னியாகுமாரி
- அறநிலையத்துறை அமைச்சர்
- பி.கே.சேகர்பாபு
- திருவள்ளுவர்
கன்னியாகுமரி, ஜன.1: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ராஜகோபுரம் கட்டும் பணி விரைவில் தொடங்கும் என்று அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். கன்னியாகுமரியில் கடலில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் விழாவில் பங்கேற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று காலை தனது மனைவியுடன் பகவதி அம்மன் கோயிலுக்கு வந்தார். பின்னர் அவர் கோயிலில் அம்மனை வணங்கி தரிசனம் செய்தார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. இதற்கான ஒப்புதல் இந்து சமய அறநிலையத்துறை வழிகாட்டுதல் குழுவிடம் உள்ளது.
ஒப்புதல் பெற்ற பின்னர் உபயதாரர்கள் பங்களிப்புடன் பகவதி அம்மன் கோயிலில் ராஜகோபுரம் கட்டும் பணி மிக விரைவில் தொடங்கும். பகவதி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 10 ஆண்டுகள் ஆகிறது. 14 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் காலத்திற்கேற்ப கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது குமரி மாவட்ட அறநிலையத்துறை தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், அறநிலையத்துறை மராமத்து பொறியாளர் ராஜ்குமார், பகவதி அம்மன் கோயில் மேலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
The post கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ராஜகோபுரம் கட்டும் பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.