தென்காசி: குற்றால அருவிகளில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அருவியில் நீராட வந்த ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். தென்காசி மாவட்டம் தென்காசி குற்றாலம் உள்ளிட்ட சில பகுதிகளின் நேற்று மாலை சிறிது நேரம் மிதமான மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழை காரணமாக இன்று காலை குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து குற்றாலம் மெயின் அருவியில் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அருவி கரையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சபரிமலை சென்று வரும் பக்தர்கள் குற்றாலம் வந்து செல்வதுண்டு. குளிக்க விதிக்கப்பட்ட தடையால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர் எனினும் பழைய குற்றால அருவி, புலி அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் குளிக்க தடை இல்லை என்பதால் அங்கு சென்று பலர் நீராடினர். கடந்த 12ஆம் தேதி குற்றாலத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிக்கரைகள் சேதமடைந்த நிலையில் ஓரளவே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து இருக்கிறது.
The post திடீரென பெய்த மழையால் நீர்வரத்து அதிகரிப்பு: குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை appeared first on Dinakaran.