×

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்; தேசிய மகளிர் ஆணையக்குழு இன்றும் விசாரணை!

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையக்குழு இன்றும் விசாரணை நடத்துகிறது. விசாரணை அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படுமென மகளிர் ஆணையக்குழு தகவல் தெரிவித்துள்ளது. டிசம்பர் 23ம் தேதி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து சம்பவம் குறித்து விசாரணை செய்வதாக அறிவிப்பை வெளியிட்டது.

இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் உண்மை கண்டறியும் குழு நேற்று முன் தினம் இரவு சென்னை வந்தடைந்தது. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி மற்றும் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தீக்சிக் இரண்டு பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு நேற்று காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை சுமார் 7 மணி நேரங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். இந்த விசாரணையில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், பேராசிரியர்கள், விடுதி நிர்வாகிகள், விடுதி காப்பாளர்கள், காவலாளிகள், உட்பட பலருடன் விசாரணை குழுவினர் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

மாலை 4 மணி அளவில் அண்ணா பல்கலைக்கழகத்தில் சம்பவம் குறித்தான முதல் நாள் விசாரணை நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, முதல் நாள் விசாரணை தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக வேந்தரும் தமிழ்நாடு ஆளுநருமான ஆர் என் ரவியிடம் சுமார் ஒரு மணி நேரமாக தேசிய மகளிர் ஆணையத்தின் உண்மை கண்டறியும் குழுவினர் கலந்தாலோசனை செய்தனர். பின்னர், பேட்டி அளித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி கூறியதாவது; விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விசாரணை முழுமையாக முடித்த பிறகு எங்களது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம். அதன் பின்னர் அறிக்கையாக தகவல் வெளியிடப்படும். இதுவரை முதற்கட்ட விசாரணையில் அண்ணா பல்கலைக்கழகத்தில முக்கிய துறைகளில் சென்று விசாரணை நடத்தி உள்ளோம். அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் விசாரணை முடியவில்லை, இன்னும் சிலவற்றை விசாரிக்க வேண்டியவை உள்ளது என்று கூறியுள்ளார்.

 

The post மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்; தேசிய மகளிர் ஆணையக்குழு இன்றும் விசாரணை! appeared first on Dinakaran.

Tags : National Commission for Women ,Chennai ,Anna University ,Commission for Women ,Anna University… ,
× RELATED அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி...