×

‘எந்த மிரட்டலுக்கும் அஞ்சமாட்டேன்’ சீமானுக்கு சட்டரீதியாக தண்டனை வாங்கி தருவேன்: திருச்சி சரக டிஐஜி வருண்குமார் அதிரடி

திருச்சி: ‘எந்த மிரட்டலுக்கும் அஞ்சமாட்டேன்’ எனவும் சீமானுக்கு நிச்சயம் சட்டரீதியாக தண்டனை வாங்கி தருவேன் என்றும் திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, திருச்சி மாவட்ட எஸ்பி, (தற்போது திருச்சி சரக டிஐஜி) வருண்குமார் அளித்த புகாரில், என்னையும் எனது குடும்பத்தினரையும் சீமான் அவதூறாக பேசி வருகிறார். இதனால் நானும் குடும்பத்தினரும் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம். எனவே சீமான் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சீமான் ₹2 கோடி நஷ்ட ஈடாக தர வேண்டும் என, திருச்சி 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தனிப்பட்ட புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில், டிஐஜி வருண்குமார் நேற்று திருச்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண்-1ல், மாஜிஸ்திரேட் பாலாஜி முன்பு ஆஜரானார். தொடர்ந்து, புகார் குறித்து சாட்சியம் அளித்தார். வீடியோ பதிவு(பென்டிரைவ்), பத்திரிகை செய்திகள் தன்னால் வழங்கப்பட்டது என்பதை உறுதி செய்தார். பின்னர் விசாரணையை ஜன.7ம் தேதிக்கு மாஜிஸ்திரேட் ஒத்திவைத்தார்.

வெளியில் வந்த டிஐஜி வருண்குமார் அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் எவ்வளவோ அரசியல் கட்சிகள் இருக்கு, யாருமே இந்த மாதிரி பண்ண மாட்டாங்க. தனிப்பட்ட முறையில் ஒரு அதிகாரி குடும்பத்தை தாக்குறது சீமான் மட்டும் தான் பண்றார். அவர் கட்சிக்காரங்க மட்டும் தான் பண்றாங்க. இது கிரிமினல் டெபர்மேஷன், அடுத்து சிவில் டெபர்மேஷன் மூவ் பண்ண போறேன், எல்லாவிதமான நடவடிக்கையும் எடுக்க போறேன். எந்த மிரட்டலுக்கும் அஞ்சமாட்டேன். தேவைப்பட்டால், வாழ்க்கை முழுக்க ஓய்வு பெற்ற பிறகு கூட நான் இந்த வழக்கை முன்னெடுத்து போவேன்.

சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன் நான். சொந்த ஊர் ராமநாதபுரம். என்ன பார்த்து இவரு தமிழனா? இவரு தாய்மொழி தமிழான்னு கேட்கிறார். யாருடைய தாய்மொழி என்ன, எந்த ஊர்ல இருந்து வந்தாங்கன்னு கேக்குறதுக்கு இவருக்கு என்ன உரிமை இருக்கு. சட்டையை கழட்டி விட்டு வா என்கிறார். இந்த சட்டைக்காக நான் தவம் கிடந்தேன். எத்தனையோ ஆண்டுகள் உயிரை விட்டு படிச்சிருக்கேன். கண்டிப்பா அவர் பேசின பேச்சுக்கு தண்டனை வாங்கி கொடுக்கணும்னு உறுதியாக இருக்கேன். வீட்டில் எலி, வெளியில் புலி என்ற கதை மாதிரி தான் அவர்.

முக்கியமாக, ஒரு தொழிலதிபர் மூலமாக இந்த பிரச்னைக்கு நடுவுல பார்த்து அனுப்பி விட்டார். நான்( சீமான்) தனிப்பட்ட கார்ல டின்ட் போட்ட கிளாஸ் போட்ட கார்ல வரேன், நான் மன்னிப்பு கேட்கிறேன் என்றார், நான் அதை ஒத்துக்கல, எனக்கு உடன்பாடு இல்லை. மைக்கை பிடிச்சா எதை வேணாலும் பேசக்கூடாது, ஒரு நாகரிகம் இருக்கணும். ஓய்வு பெற்ற பிறகு 30 வருஷத்துல ரிட்டயர் ஆயிருவீங்க என பகிரங்கமாக பத்திரிகை முன்னாடி சீமான் பேசுகிறார். மிரட்டறாரு. ஆகையால் தான் நீதிமன்றத்தில் அனைத்தையும் பதிவு செய்துள்ளேன். நான் இதை விடப்போவதே இல்லை. இவர் தனிப்பட்ட முறையில் கொடுக்கிற மன்னிப்பை நான் ஏத்துக்கல. பொதுவெளியில மன்னிப்பு கொடுப்பதற்கான வாய்ப்பு இருந்தா, நீதிமன்றத்தில் அதை தெரிவிக்கவும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ‘எந்த மிரட்டலுக்கும் அஞ்சமாட்டேன்’ சீமானுக்கு சட்டரீதியாக தண்டனை வாங்கி தருவேன்: திருச்சி சரக டிஐஜி வருண்குமார் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Seiman ,Trichy Saraga ,Trichchi ,Trichchi Saraga ,TIG Varangumar ,Tamil Party Seaman ,Trichy District SP ,Trichy ,Saraka ,Dinakaran ,
× RELATED வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி...