×

மாவட்டம் முழுவதும் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாட்டம்

 

திருவள்ளூர்: அனுமனை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் அனுமான் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் மட்டும் அனுமன் ஜெயந்தி மார்கழி மாதம், அமாவாசையும், மூலநட்சத்திரமும் கூடிவரும் நாளன்று அனைத்து ஆஞ்சநேயர் கோயில்களிலும். வைணவ கோயில்களிலும் இவ்விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி திருவள்ளூர் அடுத்த திருப்பந்தியூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு 71 ஆயிரம் வட மாலை சாற்றி, அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மலர் மாலைகள் வண்ண ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனையானது நடைபெற்றது. இதில் மப்பேடு, சுங்குவார்சத்திரம், வயலூர் உள்பட சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திருப்பந்தியூர் பகுதியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் 71 ஆயிரம் வடமாலையால் அலங்கரிக்கப்பட்ட பஞ்சமுக ஆஞ்சநேயரை காண ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

மேலும் திருவள்ளூர் பெரியகுப்பம், தேவி மீனாட்சி நகர் பகுதியில் உள்ள 32 அடி உயரம் உள்ள ஸ்ரீ விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டது. இந்த விழா மங்கல இசையுடன் துவங்கியது. விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி மூல மந்திர யாகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பல்வேறு வகையான மலர்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

இதேபோல், திருவள்ளுவரை அடுத்த காக்கலூரில் உள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்தப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியம் வெலமகண்டிகை கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு காலையில் பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட ஏராளமான வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் தாராட்சி கிராமத்தில் உள்ள 21 அடி உயர ஸ்ரீ ஆஞ்சநேயர் சிலைக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் சிறப்பு அபிஷேகம் செய்தனர், பின்னர் துளசி, வெற்றிலை மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வடை மாலை அணிவித்தனர். முன்னதாக விநாயகர், ராமர், லட்சுமணன், சீதாதேவி ஆகிய சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது.

இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல், சுண்டல், பஞ்சாமிர்தம் ஆகியவற்றை பிரசாதமாக வழங்கினர். ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அடுத்த எஸ்.வி.ஜி.புரம் கிராமத்தில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்த ஆஞ்சநேயர் காட்சியளித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதன்படி திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம், எஸ்.வி.ஜி.புரம் கிராமத்தில் முருகன் கோயிலின் உபக்கோயிலான சந்தான வேணுகோபால சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில், உள்ள பக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு அனுமன் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபராதனை காண்பிக்கப்பட்டது. அனுமன் ஜெயந்தியொட்டி விரதமிருந்த பக்தர்கள், ஆஞ்சநேயருக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய்க்காப்பு அலங்காரம் செய்தும் வழிபட்டனர்.

The post மாவட்டம் முழுவதும் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Hanuman Jayanti ,Thiruvallur ,Hanuman ,Tamil Nadu ,Kerala ,Anjaneya ,Margazhi ,Vaishnava ,Hanuman Jayanti festival ,
× RELATED சாத்தான்குளம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா