போபால் : மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 5000த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்கு காரணமான யூனியன் கார்பைட் ஆலையில், கடந்த 40 ஆண்டுகளாக கிடக்கும் நச்சு கழிவுகளை அகற்றும் பணி தொடங்கி உள்ளது. போபாலில் செயல்பட்டு வந்த யூனியன் கார்பைட் ரசாயன ஆலையில் கடந்த 1984ம் ஆண்டு டிசம்பர் 2, 3 ஆகிய தினங்களில் விஷவாயு கசிந்தது. அதில் அப்பாவி பொது மக்கள் 5,479 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். இந்த விஷவாயு கசிவு இந்திய வரலாற்றில் மிகப்பெரிய விபத்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அந்த அசம்பாவிதத்தை தொடர்ந்து, யூனியன் கார்பைட் ஆலை மூடப்பட்ட போதும், பல டன் எடையுள்ள நச்சுக் கழிவுகள் அகற்றப்படாமல் அங்கேயே இருந்தன.
இது தொடர்பான வழக்கில் 4 வாரங்களில் நச்சுக் கழிவுகளை அகற்ற மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் கடந்த 3ம் தேதி கெடு விதித்தது. அதைத் தொடர்ந்து, 40 ஆண்டுகளுக்கு பின்னர் நச்சுக் கழிவுகளை அகற்றும் பணியை போபால் விஷவாயு விபத்து நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் துறை தொடங்கி உள்ளது. 337 டன் எடையுள்ள கழிவுகள், காற்றுப்புகாத பெட்டிகளில் அடைக்கப்பட்டு காற்று புகாதபடி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 12 கன்டெய்னர்களில் வைக்கப்பட்டு வருகின்றன. நச்சுக் கழிவுகளை பொட்டலம் கட்டும் பணியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த கழிவுகள், 250 கிமீ தொலைவில் உள்ள பீத்தாம்பூர் தொழிற்பேட்டைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு அந்த கழிவுகளில் உள்ள நச்சுத் தன்மை நீக்கப்பட்டு பின்னர் பாதுகாப்பாக ஓரிடத்தில் குவித்து வைக்கப்படும். கழிவுகளை கொண்டு செல்லும் பணி ஞாயிறு இரவோ அல்லது திங்கட்கிழமை இரவோ தொடங்கும் என்று நேற்று மாலை அதிகாரிகள் கூறியிருந்தனர். இருப்பினும் பாதுகாப்பு கருதி இந்த பணிகள் அவசர கதியில் நடைபெறாது என்றும் அவர் தெரிவித்துள்ளனர். நச்சுக் கழிவுகளை அகற்றும் பணிகள் முடிந்த பின்னர், வரும் 3ம் தேதி நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட உள்ளது.
The post 5000 பேரை பலி வாங்கிய போபால் விஷவாயு ஆலைக் கழிவுகள் : 40 ஆண்டுகளுக்கு பின் அகற்றும் பணிகள் தொடக்கம்!! appeared first on Dinakaran.