×

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

பாலக்கோடு, டிச.30: பாலக்கோடு அருகே கிணற்றின் அருகே விளையாடிய சிறுவன், தவறி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கடமடை கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி, லட்சுமி தம்பதி. இவர்களுக்கு 2 மகன்கள். மூத்த மகன் ராம்(12). தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான். சுப்ரமணி நேற்று காலை தனது விவசாய நிலத்தில் குடும்பத்துடன் நெல் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது விவசாயி நிலத்தில் இருந்த 80 அடி ஆழம் கொண்ட கிணற்றின் அருகில் விளையாடி கொண்டிருந்த ஸ்ரீராம், கால்தவறி கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தான். அவனது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சென்று மீட்பதற்குள் கிணற்றில் மூழ்கினான். இது குறித்து பாலக்கோடு தீயணைப்புதுறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புதுறையினர் கிணற்றில் விழுந்த ராமை சடலமாக மீட்டனர். பின்னர் அவனது உடலை பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Palakodu ,Palakod ,Subramani ,Lakshmi ,Kadamadi ,Palakodu, Dharmapuri district ,
× RELATED சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து...