சென்னை: கடந்த 14ம் தேதி நடந்த தேர்வுக்கு வராதவர்களும் அரசு உதவி வழக்கு நடத்துநர் மறு தேர்வை எழுதலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர்(டிஎன்பிஎஸ்சி) அரசு உதவி வழக்கு நடத்துநர் (கிரேடு 2) பணியில் காலியாக உள்ள 51 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டு, விண்ணப்பிக்க அக்டோபர் 12ம் தேதி வரை கால அவகாசம் வழங்கியது. இத்தேர்வுக்கு 4186 வழக்கறிஞர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இப்பதவிக்கான முதல்நிலை தேர்வு கடந்த 14ம் தேதி சென்னை உள்பட 15 மாவட்டங்களில் நடந்தது. இதற்காக 22 தேர்வு அறைகள் அமைக்கப்பட்டிருந்தது. சென்னையில் மட்டும் 2 இடங்களில் இத்தேர்வு நடந்தது. தேர்வு நடைபெற்ற அன்று சில தேர்வு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், சில தேர்வர்களால் இந்த தேர்வை முழுமையாக முடிக்க முடியாமல் போனது. இதனையடுத்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சிக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதை பரிசீலித்த டிஎன்பிஎஸ்சி, கணினிவழி தேர்வை ரத்து செய்தது. மேலும், மறுதேர்வு 22.2.2025 அன்று ஒளிக்குறி உணரி (OMR) முறையில் நடத்தப்படும். மறுதேர்வுக்கான நுழைவுச்சீட்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு மட்டும் பின்னர், தனியே தேர்வாணைய இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்து இருந்தது. இந்த நிலையில் கடந்த 14ம் தேதி நடைபெற்ற தேர்வுக்கு வருகை புரியாத தேர்வர்களும், பிப்ரவரி 22ம் தேதி மறு தேர்வை எழுதலாம் என்று டிஎன்பிஎஸ்சி நேற்று அறிவித்துள்ளது.
The post கடந்த 14ம் தேதி நடந்த தேர்வுக்கு வராதவர்களும் அரசு உதவி வழக்கு நடத்துநர் மறு தேர்வை எழுதலாம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு appeared first on Dinakaran.