×

மழையால் பாதித்த நெற்பயிருக்கு நிவாரணம் கேட்டு செல்போன் டவரில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்: முத்துப்பேட்டை அருகே பரபரப்பு


முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அருகே செல்போன் டவரில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் பண்ணை பொது கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜா(46). இவர் கோட்டகத்தில் உள்ள தனது வயலில் சம்பா சாகுபடி செய்திருந்தார். சமீபத்தில் பெய்த தொடர் மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராஜா நேற்று மாலை வீட்டின் அருகில் இருந்த 100 அடி உயர தனியார் செல்போன் டவர் மீது ஏறி உச்சியில் நின்று கொண்டு, விவசாயம் பாதிக்கப்பட்தால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது.

எனவே எனக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறினார்.இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், எடையூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் இமானுவேல் ராயப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் பேசிய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதால் செல்போன் டவரிலிருந்து இறங்கி வந்தார்.

பின்னர் ராஜாவிடம் நடத்திய விசாரணையில், சில நாட்களுக்கு முன் பெய்த மழையால் வயலில் தண்ணீர் தேங்கி நெற்பயிர் பாதிக்கப்பட்டது. மேலும் நெற்பயிரில் பூச்சி தாக்குதலும் ஏற்பட்டுள்ளளது. அதனால் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். இதைதொடர்ந்து விவசாயி ராஜா மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post மழையால் பாதித்த நெற்பயிருக்கு நிவாரணம் கேட்டு செல்போன் டவரில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல்: முத்துப்பேட்டை அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Muthuppet ,Raja ,Kunnalur Farm Public Village ,Thiruvaroor District ,
× RELATED தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை